×

ரிஷப ராசியின் பொதுப்பண்புகள்

ரிஷப ராசிக்காரர் என்பவர் நம் நாட்டு ஜோதிடக் கணக்குப்படி சூரியன் ரிஷப ராசியில் இருக்கும்போது (வைகாசி மாதத்தில்) பிறந்தவர். இது மே மாதம் 15 முதல் ஜூன் 14 வரை ஆகும். ஜாதகத்தில் ஒருவருக்கு ரிஷபம் ராசியாக இருந்து  ராசியாதிபதி வலுவாக இருந்தால் ரிஷப ராசியின் பொதுப்பண்புகள் பொருத்தமாக இருக்கும். ரிஷபம் லக்னமாக இருந்து லக்னாதிபதி சுக்கிரன் ஜாதகத்தில் வலுவாக இருந்தாலும் இப்பொதுப் பண்புகள் சரியாக இருக்கும். பிறந்த நாளை வைத்து பலன் பார்ப்பவர்கள் மேலை நாட்டுக் கணக்குப்படி, ஏப்ரல் மாதம் 21ம் தேதியில் இருந்து மே மாதம் 21ம் தேதிக்குள் பிறந்திருந்தால் ரிஷப ராசி பலன் பொருத்தமாக இருக்கும். ரிஷப ராசி என்பதன் அடையாளம் காளை மாடு. ‘‘காளை ராசி என் ராசி’’ என்று சினிமா பாடல் இருக்கிறது அல்லவா? அது இதே ராசி. பன்னிரு ராசிகளும் அவற்றின் தன்மையை பொறுத்து நெருப்பு, நிலம், நீர், காற்று என நான்கு வகையாக பகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ரிஷப ராசி என்பது மண் (நிலம்) ராசி ஆகும்

அழுத்தக்காரர்

நிலம் அல்லது மண் ராசியைச்  சேர்ந்த  ரிஷப ராசிக்காரர் தன் தாய் மண், அதன் விளைச்சல், சொந்த ஊர், தெரு மக்கள், தேசம், தன் நிலத்துப் பண்பாடு, பழக்க வழக்கங்கள் என நிலம் சார்ந்த விஷயங்களின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பார். ‘‘மண் திணிந்த நிலனும்; நிலனேந்திய விசும்பும்; விசும்பு தைவரு வளியும்; ...’’ என்ற சங்கப்பாடல் இயற்கை அம்சங்களான நிலம், நீர் காற்று ஆகியவற்றிற்கான தொடர்பை விளக்குகிறது. உதிர்ந்த நுண் மணலால் ஆக்கப்பட்டாலும் அது மண் திணிந்த நிலம் என்றது ஏன் தெரியுமா? மண்ணால் திணிக்கப்பட்ட நிலம் இறுக்கமாக இருக்கும். அது போல ரிஷப ராசிக்காரர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மிகுந்த அழுத்தக்காரராக இருப்பர். இடையே கீழே விழுந்து எழுந்தாலும் அசராமல் அடுத்தது என்ன என்று ஆலோசிப்பார். நிதானம் என்பதன் மறு பெயர் ரிஷப ராசி எனலாம்.

சொகுசு - சுக ஜீவனம்

பொதுவாக ரிஷப ராசிக்காரர் வாழ்க்கையை அனுபவிக்கப் பிறந்தவர்.  அவர் உட்காரக் கூட சொகுசான சோபா தேடுவார். நடக்கக்கூட யோசிப்பார்.  நடந்து போனால் எதோ இவர் பின்னால் படை பரிவாரங்கள் பவனி வர நடந்து போவது போல அசையாமல் அலுங்காமல் குலுங்காமல் அதிராமல் நடந்து போவார். உச்சி வெயிலில் கூட இவர் நிலவொளியில் நடப்பது போல நடப்பார். பதற மாட்டார். வெளியில் தானே போய் முடிக்க வேண்டிய வேலை இருந்தால் அன்றி இவர் வீட்டை விட்டு வெளியே போக மாட்டார். வீட்டை மிகவும் நேசிக்கும் இவர் வீட்டுக்குள்ளும் எவ்வித ஆரவாரம் இல்லாமல் ஏதேனும் வீரதீர சாகசங்கள் செய்த சரித்திர ஹீரோக்கள் பற்றிய கதைகளை வாசித்துக்கொண்டு இனிமையான மென்மையான பாடல்களை கேட்டுக்கொண்டு சுக ஜீவனம் நடத்துவார். அலட்டலான பேச்சு,. ஆரவாரமான சிரிப்பு, அமர்க்களமான அலங்காரம் போன்றவை இவருக்குப் பிடிக்காது. குறிப்பாகச்  சொன்னால் சத்தம் போட்டு இவர் முன்னால் யாரும் பேசுவதோ பாட்டுக் கேட்பதோ டிவி பார்ப்பதோ பிடிக்காது. இவரும் அதையெல்லாம் செய்ய மாட்டார்.

உணவுப் பிரியர்

ரிஷப ராசிக்காரர் உணவுப்பிரியர். பாரம்பரியமான உணவுகளை அதிக அளவில் சாப்பிட விரும்புவார். மேஷ ராசி மாதிரி நுனிப்புல் மேய்வதோ சிம்ம ராசி போல கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை விட்டுவிட்டுப் போவதோ கிடையாது. ரிஷப ராசிக்காரர் மூன்று வேளையும் சூடாக சுவையாக வகை வகையாகச் சாப்பிடுவார். கூழ் அல்லது கஞ்சி குடித்தால் கூட வெங்காயம், வற்றல், வடாம், ஊறுகாய், துவையல் என்று மூன்று நான்கு வகைகள் வைத்து சாப்பிடுவார். தட்டில் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் ரசித்து, ருசித்து நிதானமாக சாப்பிட்டு முடிப்பார். இடைப்பட்ட நேரங்களிலும் நல்ல டிஃபன் சாப்பிடுவாரே தவிர தவிட்டு பிஸ்கட், லெமன் டீ என்ற உணவுகளை விரும்பமாட்டார். உளுந்து வடை, முந்திரி பக்கோடா, பாதாம் அல்வா என்று ‘ரிச்சான டிஃபன்’ ஐட்டங்கள் தான் சாப்பிடுவார். இவருக்கு நல்ல ஜீரண சக்தி இருக்கும். அதனால் வயிற்றுப் பிரச்னைகள் வராது.

தோற்றமும் நடையும்

ரிஷப ராசியில் பிறந்த  ஆண்களும், பெண்களும் பார்க்க கொஞ்சம் குண்டாக ‘பப்ளியாக’ இருப்பார்கள். பொதுவாகவே ரிஷப ராசிக்காரர் நடக்கும்போதும் ஜல்லிக்கட்டு காளை போல ஆடாமல் அசையாமல் நடப்பர். கிராமங்களில் ‘‘மாடு மாதிரி வர்றான் பாரு; கொஞ்சமாவது அசையுறானா? என்பார்களே அது இந்த ரிஷப ராசிக்காரரை பார்த்து சொன்னதாகவே தோன்றும். நடையில் ஒரு அலட்சியம்; செயல்பாட்டில் ஒரு திமிர்; மற்றவரின் பேச்சுக்கோ செயலுக்கோ எதிர்வினையாற்றுவதில் ஒரு எகத்தாளம்; ஆகியவை ரிஷப ராசிக்காரரின் ‘சிக்னேச்சர்’ எனலாம்.  

நிதானத்தில் எல்லைக்கோடு

ரிஷபராசிக்காரரிடம் ஒருவர் பெரிய பூகம்பம் வரப்போவதாக சொன்னாலும் ‘அப்படியா’ என்று கேட்பார். பதற மாட்டார். ஆனால் திடமாகச்  செயல்படுவர். தன்னைச்  சார்ந்த அனைவருக்கும் தக்க  பாதுகாப்பு அளிப்பார். எதிர்ப்பேச்சு பேசுவது இவருக்குப் பிடிக்காது. மற்றவர் இவரைச்  சீண்டி பார்த்தாலும் இவர் அமைதியாகவே இருப்பார். கொஞ்சமும் அசைந்து கொடுக்க மாட்டார். ‘‘நீ பாட்டுக்கு கத்திக்கிட்டே இரு. நீ திட்ட திட்ட நான் திண்டுக்கல்லு. நீ வைய வைய நான் வைரக்கல்லு’’ என்று அரங்கத்தனமாக இருப்பார். கோபம் வராது; வந்தால் பேரழிவு உண்டாகும்.
யாரிடத்திலும் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று பகிரங்கமாக சொல்லமாட்டார்கள். ஆனால் அன்பு செலுத்துவதில் ரிஷப ராசி ஆணுக்கும் பெண்ணுக்கும் நிகர் அவர்களே ஆவர். வார்த்தைகளை விட செயல்பாடுகளை மிகவும் நம்புவார்கள். சின்ன சின்ன கவர்ச்சியான பரிசுகள் அளிப்பதை விட வாழ்க்கைக்கு நிரந்தரமான விஷயங்களை செய்து தருவதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள்.

தன் முடிவும் வெற்றியும்

ரிஷப ராசிக்காரரின் விருப்பத்தை இவரது தாயோ, தந்தையோ மனைவியோ, நண்பரோ, காதலியோ இவரிடம் கரடியாக கத்தினாலும் சரி கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல படித்துப் படித்துச் சொன்னாலும் சரி மாற்றவே முடியாது. யார் என்ன சொன்னாலும் தனக்குச் சரியென்று மனதில் பட்டதை மட்டுமே செய்வார்.  மற்றவரிடம் எதிர் வாதம் செய்து தன் நியாயத்தை எடுத்துரைக்க மாட்டார். அவர்கள் சொல்வதை காது கொடுத்து எத்தனை மணி நேரம் என்றாலும் கேட்பார். சரி செய்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். நம் பேச்சை அவர் கேட்டு நடப்பார் என்று யாராவது நம்பினால் அது முட்டாள்தனம். இவருடைய முடிவுகள் சரியாக இருக்கும்; திட்டமிட்டுச் செய்வார் அதனால் வெற்றி இவரைத் தேடி வரும். எப்போதாவது தோல்வி ஏற்பட்டால் அதற்காக கலங்கமாட்டார். யாரையும் திட்ட மாட்டார். அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்ததில் வெற்றி பெறுவார். இவருக்கு தீதும் நன்றும் பிறர் தர வாராது. இரண்டுக்கும் இவரே முழு பொறுப்பாவார்.

பணம் புழங்கும் தொழில்

ரிஷப ராசிக்காரர் பெரும்பாலும் அடிமை வேலை மற்றும் 9 - 5 என்ற  மணிக்கணக்கு வேலையை விரும்ப மாட்டார். தனக்கு மேலே ஒரு மேற்பார்வையாளர் இருப்பதையும் விரும்புவதில்லை. கடின உடல் உழைப்பு தேவைப்படும் வேலையும் பார்க்க மாட்டார். பாஸ் என்ற பாஸ்கரனில் வரும் ஆர்யா போலத்தான் இருப்பார். இவருக்குப் பணம் மிகவும் பிடித்த விஷயம். அதனால் பணம் புழங்கும் ஷேர் மார்க்கெட், வட்டிக்கடை, அடகுக்கடை ஃபைனான்ஷியர், கமிஷன் ஏஜெண்ட், பவர் புரோக்கர் போன்ற வேலைகள் செய்வதில் விருப்பம்  உடையவர். இவர் மண் ராசி என்பதால் ரியல் எஸ்டேட், கட்டிட காண்ட்ராக்ட் போன்றவற்றில் ஈடுபடுவார்.

அதிகார ஆசை

ரிஷப ராசிக்காரர் அதிகார ஆசை உள்ளவர். அதனால் சிலர் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளாகவே இருக்க விரும்புவார்.  ஓய்வு பெறும் வயதான பின்பும் சிலர் பதவி மற்றும் அதிகார ஆசைக்காக புதிய பதவியோ அல்லது பதவி நீட்டிப்போ கேட்டுப் பெறுவர்.  அதிகாரம் இல்லாத வேலையில் எத்தனை லட்சம் கிடைத்தாலும் அதை இவர் விரும்புவதில்லை. இந்த ராசிக்காரர்கள் அதிகாரம் செலுத்தக் கூடிய வேலைகளில் மட்டும் ஈடுபடுவர். அதிகாரத்தைக் கொண்டு பணம் சம்பாதிப்பதை விட அதிகாரம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். எளியவர் யாருக்கும் இறங்கி வந்து பதில் சொல்லாமல் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்து கொள்வது; தன்னை சந்திக்க வருவோரிடம் சுருக்கமாகப் பேசுவது,  விரல் சொடுக்கிக் கூப்பிடுவது, கை ஜாடை மற்றும் தலை அசைவால் பணியாளருக்குக் கட்டளையிடுவது, தோரணையாக, ‘‘கெத்தாக’’ நடந்துகொள்வது, பாராட்டுதல், வெறுத்தல் போன்ற உணர்வுகளைக் கூட சொற்களால் விவரிக்காமல் ஜாடையால், உடல்மொழியால் வெளிப்படுத்துவது  போன்ற அதிகாரப் போக்குகளை இவர் மிகவும் ரசித்து செய்வார். இத்தகைய இவரது உடல் மொழியை மற்றவர் ரசிக்க வேண்டும் என்றும் விரும்புவார். கடின உழைப்பாளிகளான ரிஷப ராசி ஆண்களும் பெண்களும் தன் சுய முன்னேற்றத்துக்காக இரவு பகல் பாராமல் உழைப்பர். பின்பு நீண்ட காலம் ஓய்வெடுத்துக் கொள்வர்.

பிரம்மாண்டம்

ரிஷப ராசிக்காரர் எதைச்  செய்தாலும் எதை வாங்கினாலும் அது பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். வீட்டு விசேஷங்களை அதிக செலவு செய்து அமர்க்களமாக நடத்துவார். வீடு கட்டினால் தன் கூட இருப்பவர்கள் பார்த்து அதிசயிக்கத்தக்க வகையில் மிக அழகாகக் கட்டுவார். வீட்டுக்கு தேவையான எந்தப் பொருள் வாங்கினாலும் ஆடம்பரமான பொருளாகப் பார்த்து வாங்குவார். வீட்டில் செடி, கொடி, மரம் ஆகியன இருப்பதும் அங்கு இன்னிசை கீதங்கள் ஒலிப்பதும் இவருக்கு பிடித்த விஷயங்கள் ஆகும். அங்கு இவரது கண்ணசைவுக்கு ஓடி வந்து பணிவிடை செய்யக்கூடிய ஆட்கள் இருப்பார்கள். இவர் ஒரு வீட்டு பிராணி என்பதால் வீட்டை ரசனைக்குரிய இடமாக வைத்திருப்பார். கற்பனை கதைகள் தத்துவ நூல்கள் படிப்பதை விரும்பமாட்டார். வீர, தீர சாகசக் கதைகளே இவருக்கு விருப்பமாகும்.

சிரிப்பு ‘நோ’ -- சுற்றுலா ‘நோ’

ரிஷப ராசிக்காரருக்கு நகைச்சுவை உணர்வு கொஞ்சம் கம்மி. அவர் காமெடி காட்சிகளைப் பார்க்கும்போது கூட வாய்விட்டு சிரிக்க மாட்டார். அவர் முகத்தில் ஒரு ரிலேக்சேஷன் தெரியும்; அது அவர் அக்காட்சிகளை ரசிக்கின்றார் என்பதை நமக்கு உணர்த்தும். இதற்கெல்லாம் நான் சிரித்துவிடுவேனா என்பது போல அமர்த்தலாக ஆனந்தமாக உட்கார்ந்திருப்பார். ஆனால் யாராவது வழுக்கி கீழே பொத்தென்று விழுந்துவிட்டால் ஹோவென்று வெடிச் சிரிப்பு சிரிப்பார். இவருக்கு டூர், டிராவல், பிக்னிக் போன்றவை பிடிக்காது. வேலை தொழில் விஷயமாக வெளியிடங்களுக்குச்  சென்றாலும் அங்கும் ஊர் சுற்ற மாட்டார். வீட்டிலோ தன் அறையிலோ பலரைக் கூட்டி வைத்துக்கொண்டு அரட்டை அடிக்க மாட்டார். எனவே இவருக்கு அதிக நண்பர்கள் இருக்க மாட்டார்கள். மிகச்சிலரை தன்  நண்பர்களாகத் தேர்ந்தெடுத்து வைத்திருப்பார். அவர்களிடம் சில வார்த்தைகள் மட்டுமே பேசுவார் ஆனாலும் இவர் நல்ல நண்பராக இருந்து அவர்களுக்கு ஆபத்து காலத்தில் அவர்களின் துன்பம் தீர்ப்பார். இவர் நல்ல பாதுகாவலர்.

(தொடரும்)

Tags : Rishabha Rasi ,
× RELATED காமதகனமூர்த்தி