சென்னை: தொடர்ந்து தன்னைப் பற்றி ஆபாசமாக கருத்துகள் வெளியிட்டு வந்த 30 பேர் மீது நடிகை ஹனிரோஸ் புகார் அளித்தார். இதில் 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மலையாள நடிகையான ஹனிரோஸ், தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரை பின்தொடர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஹனிரோஸை ஆபாசமாக வர்ணித்தபடி பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இதை கண்டிக்காதது ஏன்? இதுபோன்ற கருத்துகளை நீங்கள் ரசிக்கிறீர்களா? என்றெல்லாம் ஹனிரோஸை கேட்டு வந்தனர்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த தொழிலதிபர் தொடர்பாக பரபரப்பு புகார்களை ஹனிரோஸ் தெரிவித்தார். ஆபாசமாக வர்ணிப்பதுடன் தன்னை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லையும் தருகிறார் என்றார் ஹனிரோஸ். இந்நிலையில் நேற்று எர்ணாகுளம் மத்திய காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதில் தொடர்ந்து தன்னைப் பற்றி ஆபாசமாக கமென்ட்டுகளை வெளியிட்டு வரும் 30 பேர் மீது ஹனிரோஸ் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் தடுப்பு பிரிவின் கீழ் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைதானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.