×

பள்ளிவாசலில் “மாங்கல்யம் தந்துனானே”

அண்மையில் கேரளாவில் ஒரு பள்ளிவாசல் வளாகத்தில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமணம் பெரிய அளவில் செய்தியானது. போதிய வசதிகள் இல்லாத ஓர் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு அந்தப் பகுதியின் முஸ்லிம் ஜமாஅத்தார்கள் நடத்தி வைத்த திருமணம் அது. பள்ளிவாசலில் “மாங்கல்யம் தந்துனானே” எனும் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை மத நல்லிணக்கத்திற்கான ஓர் அடையாளம் என்று பலரும் பாராட்டினர். இஸ்லாமிய மார்க்கத்தில் பள்ளிவாசல்கள் என்பது காலங்கள்தோறும் மத நல்லிணக்கத்திற்கான அடையாளங் களாகத்தான் திகழ்ந்து வந்துள்ளன. இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சி அமைத்ததும் குலத் தலைவர்கள், தூதுவர்கள் பலரும் அவரைச் சந்திக்க வந்தனர்.

ஒரு முறை நஜ்ரான் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவக் குழுவினரும் நபிகளாரைச் சந்தித்து உரையாட மதீனா வருகை தந்தனர். வழிபாட்டிற்கான நேரம் வந்ததும் கிறிஸ்தவக் குழுவினர் பள்ளிவாசலிலேயே வழிபாடு நடத்த நபிகளார் அனுமதி வழங்கினார்கள். இறைத்தூதர் அவர்களின் தலைமைச் செயலகமாக அன்று விளங்கியதும் மஸ்ஜிதுன் நபவி எனும் பள்ளிவாசல்தான். எல்லாப் பிரிவு மக்களும் நபிகளாரை அங்குதான் சந்தித்துப் பேசுவார்கள். மக்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் நீதிமன்றமாகவும் பள்ளிவாசல் இருந்தது.

அன்று தொடங்கி இன்று வரை பள்ளிவாசல்கள் நல்லிணக்கத்தின் அடையாளங்களாகத்தான் திகழ்ந்து வருகின்றன. ஆழிப்பேரலை ஏற்பட்ட போது நாகூர் போன்ற இடங்களில் சாதி,மத பேதமின்றி ஏராளமான மக்கள் பள்ளிவாசலில்தான் தங்கினார்கள். சென்னைப் பெருவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட இதர மதச் சகோதரர்களுக்கு இடம் அளித்தவை பள்ளிவாசல்கள்தாம். நீட் தேர்வின் போது வெளிமாநிலங்களுக்குத் தேர்வு எழுதச் சென்றவர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாதபோது அவர்களுக்காகப் பள்ளிவாசல் கதவுகள் திறந்துவிடப்பட்டன.

குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லை எனில் இன்றைக்கும் இந்து தாய்மார்கள் ஓதிப் பார்க்கும் இடமும் பள்ளிவாசல்கள்தாம். இஸ்லாமிய வாழ்வியலில் பள்ளிவாசல் என்பது வெறும் தொழுகைக்கான இடம் மட்டுமல்ல, சமூக, பண்பாட்டு மையங்களாகவும் திகழ்ந்தன என்பதே வரலாறு.
நேர்மையான நல்ல மனிதர்கள்தாம் இறையில்லத்தைப் பராமரிக்கும் தகுதி உள்ளவர்கள்...அவர்களால்தாம் நற்செயல்களை முன்னெடுக்க முடியும் என்று திருமறை கூறுகிறது.

“யார் இறைவனையும் மறுமைநாளையும் நம்புகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத் கொடுக்கின்றார்களோ, இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றார்களோ அவர்கள்தாம் இறையில்லங்களைப் பராமரிப்பவர்களாய்(அவற்றின் ஊழியர்களாய்) ஆகமுடியும்.” (குர்ஆன் 9:18)

- சிராஜுல் ஹஸன்

Tags : school ,
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்