சென்னை: அதிகளவு மீன்கள் வந்த காரணத்தால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக சரிந்தது. ஆடி மாதத்தின் மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் அம்மனுக்கு படைக்க மீன்களை வாங்க கூட்டம்கூட்டமாக வந்தனர். குறிப்பாக ஆடி மாத விசேஷத்தை (கூழ் ஊற்றுதல்) முன்னிட்டு, அசைவ பிரியர்கள் அதிகளவில் வந்து இருந்தனர். சனிக்கிழமை நள்ளிரவு முதலே, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மொத்த வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் ஏராளமானோர் வஞ்சிரம், வவ்வால், கொடுவா போன்ற மீன் வகைகளை வாங்க வந்தனர். இந்நிலையில், வஞ்சிரம், வவ்வால், கொடுவா, நாயாறல், சீலா,கானாங்கத்தை போன்ற பெரிய மீன்களின் வரத்து அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டது. இதன்காரணமாக, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அனைத்து மீன்களின் விலையும் 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.900க்கும், வெளவால், ரூ.700க்கும், கொடுவா ரூ.600க்கும், பர்லா கிலோ ரூ.230க்கும், அரைக்கோலா 600க்கும், பாறை கிலோ 250க்கும், சங்கரா ரூ.400க்கும், மடவை கிலோ ரூ.200க்கும் முதல் நெத்திலி கிலோ 200க்கும், இறால், நண்டு, கடம்பா போன்றவை ரூ.400 முதல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறுகையில், ‘‘ஆடி மாதம் முடியும் வரை ஒவ்வொரு வாரமும் மீன் வாங்க, சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் அதிக அளவு வருவார்கள். அதிகளவு மீன் கிடைத்தால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.’’ என்று தெரிவித்தனர்….
The post மீனவர் வலையில் அதிகளவு சிக்கியதால் மீன்களின் விலை கடும் சரிவு: காசிமேட்டில் அசைவ பிரியர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.
