×

அத்தங்கி காவனூர் கிராமத்தில் புதர்மண்டிய சேவை மைய கட்டிடம்: சமூக விரோதிகள் கூடாரமானது

ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றியம் அத்தங்கி காவனூர் கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் புதர்மண்டி கிடப்பதால், சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தங்கி காவனூர் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஒன்றிய அரசு கடந்த 2013-14ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தினை கொண்டு வந்தது. இதன் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ..13.12 லட்சத்தில் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் சுய தொழில்கள் செய்வதற்கு ஏதுவாகவும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு அலுவலகமாகவும், கிராம மக்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அளிப்பதற்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காகவும் இந்த ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகளாகியும் இதனை ஊராட்சி நிர்வாகம் திறக்காமல் பூட்டியே வைத்துள்ளது. இதை பயன்படுத்தி இந்த கட்டிடத்தின் பூட்டை சமூக விரோதிகள் உடைத்து, உள்ளே இருந்த மின்விசிறிகள், மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை திருடிச் சென்றனர். மேலும், சிலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயலுக்கு இந்த கட்டிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கட்டிட வளாகம் தற்போது புதர் மண்டி, விஷப்பூச்சிகள் இருப்பிடமாக மாறியுள்ளது. பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வீணாகி வரும் இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என பலமுறை சம்மந்தப்பட்ட ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக கட்டப்பட்ட அரசு கட்டிடம் 8 வருடங்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த ஊராட்சி சேவை மைய கட்டிடம் போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து வருவதால், அரசு அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, இந்த சேவை மைய  கட்டிடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,’’ என்றனர்….

The post அத்தங்கி காவனூர் கிராமத்தில் புதர்மண்டிய சேவை மைய கட்டிடம்: சமூக விரோதிகள் கூடாரமானது appeared first on Dinakaran.

Tags : Budharmandiya Seva Kendra ,Athangi Kavanur village ,Oothukottai ,Kavanur ,Ellapuram ,Budharmandi ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு