×

நோபல் உலக சாதனைக்காக ஒத்திகை செஸ் விளையாட்டு; 1,414 செஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு: மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்குகிறார்

மாமல்லபுரம்: நோபல் உலக சாதனைக்காக மாமல்லபுரத்தில் ஒத்திகை செஸ் போட்டியை அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி  வைத்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்  வழங்குகிறார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் – செரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இதில், 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். மேலும் வீரர், வீராங்கனைகள் விளையாட வசதியாக 2 அரங்குகளில் 707 செஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நோபல் உலக சாதனை படைப்பதற்காக 1,414 வீரர், வீராங்கனைகள் ஒத்திகை செஸ் விளையாட்டுக்காக 707 போர்டுகளில் விளையாடும் வகையில் ஆன்லைன் மூலமாக உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை ஒத்திகை செஸ் விளையாட்டை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் துவக்கிவைத்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஒத்திகை போட்டி இரவு 9 மணி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அனைவரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளார். இதையடுத்து, அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: இந்தியாவில் முதல் முறையாக அதுவும் தமிழகத்தில் மாமல்லபுரத்தில் செஸ் போட்டியை நடத்த வாய்ப்பு பெற்று தந்தது முதல்வர் மு.க.ஸ்டாலின்.  இன்றைய தினத்தில் ஒத்திகை விளையாட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், 1,414 வீரர்கள் பங்கேற்க கூடிய 707 செஸ் போர்டுகளில் விளையாடும் போட்டியை நேரடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர்  4 வருடத்தில் செய்யவேண்டிய அனைத்து பணிகளையும் 4 மாதங்களில் முடித்து, போட்டி நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே 100 சதவீத பணி நிறைவு  செய்துள்ளார். ஜூலை 28ம்தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியை துவக்கி வைக்கின்றனர். நோபல் உலக சாதனை படைப்பதற்காக பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து சான்று வழங்க உள்ளார். இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் அனைத்து குக்கிராமங்களுக்கும் செஸ் போட்டியை முதல்வர் கொண்டு சேர்த்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் செஸ் போட்டியை அருமையாக விளையாடுவார். போட்டி நடைபெறும் இடம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்….

The post நோபல் உலக சாதனைக்காக ஒத்திகை செஸ் விளையாட்டு; 1,414 செஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு: மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்: எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : MAMALAPURAM ,MLA ,Mamallapuram ,Ministers ,Meyanathan ,Tha. Mo. Anbarasan ,Assistant Secretary General ,Dinakaraan ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...