×
Saravana Stores

ஐஸ்வர்யம் அருளும் அஷ்ட செல்விகள் 3 : விஸ்வநாத செல்வி


சிந்துபூந்துறை, திருநெல்வேலி.


திருநெல்வேலி நகரில் சிந்துபூந்துறையில் வீற்றிருந்து அருட்பாலிக்கிறாள் விஸ்வநாத செல்வி. நெல்லை சீமையில் அப்போது வாழ்ந்து வந்த செல்வச் சீமான்களில் ஒருவரான காசி விஸ்வநாத பிள்ளை, தான் கட்டிய புதுவீட்டுக்கு கிரஹப்பிரவேசம் நடத்தும் போது புண்ணிய ஸ்தல தீர்த்தங்கள் கொண்டு வந்து தெளிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அதன்படி காசிக்கு சென்று கங்கை நீரை கொண்டு வந்தார். அடுத்து செண்பகா அருவிக்கு சென்று நீரை எடுத்து வர, செம்பு குடங்கள் மூன்றும் தனது உதவியாளர் ஒருவருடன் வண்டி கட்டி குற்றாலம் வருகின்றனர்.

அருவி நீரை பிடித்து வரும் போது, அவ்விடம் வாசம் செய்த செண்பகவல்லி என்ற வடக்குவாசல் செல்வி தனக்கு பூஜை செய்யாமல் தண்ணீர் எடுத்துச் செல்லும் காசி விஸ்வநாத பிள்ளையை சோதிக்க எண்ணினாள். தண்ணீர் எடுத்த பின் மீண்டும் ஊருக்கு வண்டியை கட்டினர். மலையடி வாரம் வண்டி வரும் போது, வண்டிக்காரன் கருப்பன், ஐயா என்று குரல் கொடுத்தான். என்ன, கருப்பா, என்று கேட்டவாறு வில்வண்டிக்குள் இருந்த காசி விஸ்வநாத பிள்ளை, வெளியே எட்டி பார்த்தார். சாலையோரம் பத்து வயது சிறுமி, பட்டுச்சட்டை, பட்டுப்பாவாடையுடன் நின்று கொண்டு, வண்டியை நிறுத்துமாறு கையை நீட்டினாள்.

வண்டியை நிறுத்துச்சொல்லி இறங்கினார் காசி விஸ்வநாத பிள்ளை. அந்த சிறுமியிடம் சென்றார். என்னம்மா இந்த நேரம் தனியே இங்கே நிற்கிறாய் என்று கேட்க, வீடு நெல்லைச்சீமையில் உள்ளதாகவும், தங்கள் வண்டியில் வரலாமா என்று கூறினாள். வாம்மா, அழைத்துச்செல்கிறேன் என்று கூறி, வண்டியில் அழைத்து வந்தவர். தன் வீட்டுக்கும் அழைத்துச்சென்றார். மனைவியிடம் அந்த சிறுமியை அறிமுகம் செய்து வைத்து, லட்சுமி கடாட்சம் பொருந்திய பெண். நம் இல்லம் வந்துள்ளாள். நாளை நமது வீட்டில் நடைபெறும் கிரஹப் பிரவேசம் முடிந்து பிறகு அனுப்புவோம் என்று கூறினார்.

அவரது மனைவிக்கும் அந்த சிறுமியை பிடித்துபோக, சிறுமியை அழைத்துச் சென்று உபசரித்தாள். ‘‘புது வீட்ட வந்து பாரு’’ என்று வீட்டை சுற்றி காட்டுகிறாள். பூஜை அறையைக் கண்ட அந்த சிறுமி அங்கே சம்மணம் இட்டு அமர்ந்தாள். காசி விஸ்வநாதன் மனைவியை பெயர் கூறி காமாட்சி அம்மா இங்க வாங்க என்று அழைத்தாள். விரைந்து வந்த காமாட்சி, ‘‘என் பேரு எப்படிம்மா உனக்கு தெரியும்’’ என்று வியப்புடன் கேட்டாள். அது இருக்கட்டும், வந்ததிலே இருந்து சாப்பிடு, சாப்பிடுன்னு சொன்னியே, இப்ப, எனக்கு சாப்பாடு கொண்டு வா என்றாள். பால் காய்ச்ச முன்னாடி இந்த வீட்ல எச்சிப்படுத்த கூடாது.

வா, அந்த வீட்டுல வச்சி சாப்பிடலாம் என்றாள். அது முடியாது. நான் உன் கையில சாப்பிடணுமுன்னு நினைச்சேன்னா இந்த வீட்ல வச்சு தான் சாப்பிடுவேன். இல்லேன்னா, சாப்பாடு வேண்டாம் நான் புறப்படுறேன் என்றாள். செத்த இரும்மா, அவரு கிட்ட கேட்டுகிட்டு வாரேன். என்று கூறி சென்றவள். பின்னர் தனது கணவனோடு வந்து தலை வாழை இலை விரித்து, விருந்து பரிமாறினர். உணவு உண்ட அந்த சிறுமி, இனிப்பு ஏதும் இல்லையா என்று கேட்டாள். நாளைக்கு தான் பால்காய்ச்சி. அப்பத்தான் பாயாசம் வைப்போம். இப்ப கேக்கிறியே என்று கூறிய மனைவியை அதட்டி, போ, அடுக்களையில வெல்லக்கட்டி இருந்தா கொண்டு வந்து கொடு, கேட்டத இல்லன்னு சொல்லாத என்று கூறினார்.

அதன்படி வெல்லக்கட்டி எடுத்துக்கொண்டு பூஜை அறைக்கு சென்றாள். சிறுமி அங்கு இல்லை. கணவன், மனைவி இருவரும் வீட்டைச் சுற்றி தேடினர். அப்போது பூஜையறையில் அசரீரி கேட்டது. காசிவிஸ்வநாதா, உன்னோடு வந்தது நான் தான். எனது பெயர் செல்வி, எனக்கு வடக்கு பார்த்து வாசல் வைத்து கோயில் கட்டு, உன் வாழ்வை வளமாக்கித் தருகிறேன். அது மட்டுமன்றி என்னை வணங்கும் அன்பர்களுக்கு எல்லா வளமும் நலமும் அளித்து அருள்புரிவேன் என்றது. செல்வி அம்மனுக்கு கோயில் கட்டிய பிறகே, தான் கட்டிய புது வீட்டுக்கு கிரஹப் பிரவேசம் செய்தார் காசி விஸ்வநாத பிள்ளை.

அவரது காலத்திற்கு பிறகு அவரது வம்ச வழியினர் கோயிலை புதுப்பித்தனர். அப்போது அம்மன் அருள் வந்து பேசிய ஒருவர், தன்னோடு எனது தங்கைகள் சந்தனமாரி, காந்தாரி ஆகியோர் வந்திருப்பதாக கூறி, அவர்களுக்கும் பீடம் அமைத்து வழிபடக் கூறினாள். அவ்வாறு கோயில் புதுப்பிக்கப்பட்டது. தனது பாட்டனார் பெயரை சேர்த்து காசி விஸ்வநாத செல்வி என்று அவரது சந்ததியினர் அம்பாளை அழைத்து வந்தனர். நாளடைவில் அந்த பெயர் விஸ்வநாத செல்வி என்று அழைக்கப்படலானது. அஷ்டகாளியரில் கடைசி பிறந்த காந்தாரி அம்மனை அவர்கள் துர்க்கை என்று அழைக்கலாயினர். அதுவே இப்போதும் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் விஸ்வநாத செல்வி தனிசந்நதியில் வடக்கு நோக்கி அமர்ந்துள்ளாள். அடுத்த சந்நதியில் சந்தனமாரியம்மனும், துர்க்கையும் அமர்ந்துள்ளனர். கோயிலில் துவார கணபதி வடக்கு நோக்கி கன்னி மூலையில் அமர்ந்துள்ளார். செல்வி அம்மனுக்கு பூஜை செய்வது போல கருப்பசாமி கையில் மணியுடன் தெற்கு நோக்கி நிற்கிறார். ஒரு குடும்பத்தார் வணங்கி வந்த கோயில் பின்னர் ஒரு சமுதாயக்கோயிலாக மாறியது. இப்போது இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டதாக இக்கோயில் உள்ளது. நெல்லை சந்திப்பிலிருந்து அரை கி.மீ. தொலைவிலுள்ள சிந்துபூந்துறையில் கோயில் அமைந்துள்ளது.

படங்கள். ஆர். பரமகுமார்.

Tags : Viswanatha Selvi ,
× RELATED எத்திக்கும் கொண்டாடும் தித்திக்கும் தீபாவளி