×
Saravana Stores

சம்மன் அனுப்பினாலும் லீனா மணிமேகலை ஆஜராக மாட்டார் இயக்குனர் சுசி கணேசன் தரப்பு வாதம்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை, : கவிஞர் லீனா மணிமேகலை மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பினால் கூட ஆஜராக மாட்டார் என்று இயக்குனர் சுசி கணேசன் தரப்பில் வாதிடப்பட்டது. நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ம் ஆண்டு ‘‘மீ டூ’’ ஹேஷ்டேக்  மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அப்போது, பிரபல இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் மீ டூ குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக, பொய்யான குற்றச்சாட்டு எனக்கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு  விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டி, விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்திரேட் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை. எனவே வழக்கை வேறு மாஜிஸ்திரேட்டுக்கு மாற்றி உத்தரவிடக்கோரி லீனா மணிமேகலை மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து லீனா மணிமேகலை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருகிறார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நான்கு மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று விதித்த காலக்கெடு ஜூன் மாதத்துடன் முடிந்து விட்டது. லீனா மணிமேகலைக்கு எதிராக, புகைப்பிடிப்பது போன்ற காளி பட போஸ்டர் சர்ச்சை தொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர், இந்தியா பாதுகாப்பு இல்லாத நாடு என்றும் இந்திய சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நீதிமன்றம் சம்மன் அனுப்பினால் கூட ஆஜராக மாட்டார் என்று வாதிடப்பட்டது. அப்போது, மணிமேகலை தரப்பில் அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உத்தரவு ஏதும் பிறப்பிக்காமல் வழக்கமான நடைமுறையில் வழக்கு விசாரணைக்கு வரட்டும் என்று கூறி நான்கு வாரத்துக்கு தள்ளிவைத்தார்….

The post சம்மன் அனுப்பினாலும் லீனா மணிமேகலை ஆஜராக மாட்டார் இயக்குனர் சுசி கணேசன் தரப்பு வாதம்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Susi Ganesan ,Leena Manimegali ,Chennai ,Leena Manimekalai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது