×

நினைத்த காரியம் நிறைவேற்றும் பாலமுருகன் கோயில்

புதுவை காலாப்பட்டு

புதுச்சேரி காலாப்பட்டு மாத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் பாலகன் ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் பாலமுருகன் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு:
 

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் அமைந்துள்ள இடம் காடாக இருந்தது. இப்பகுதியில் பள்ளம் தோண்டியபோது முருகரின் வேல் கிடைத்துள்ளது. அதே இடத்தில் அந்த வேலை நட்டு பொதுமக்கள் வழிபட்டு வந்துள்ளனர். 1973ல் சிறிய கோயிலாக அமைத்து, அங்கு பாலமுருகரை வைத்து வழிபட தொடங்கினர். 1975ல் சுண்ணாம்பு கல் மூலம் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு, 2001ல் கோயில் விரிவுபடுத்தப்பட்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோயிலின் ராஜகோபுரம் 72 அடியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கடைசியாக 2014ல் மிகப்பெரிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயில் வளாகத்தை சுற்றி விநாயகர், மயிலம்மாள், தட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர், பெருமாள், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, துர்க்கை, ஐயப்பன், காலபைரவர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைந்துள்ளன.

சிறப்பு பிரார்த்தனைகள்:

குழந்தை இல்லாதவர்கள் பாலமுருகரை தரிசித்து விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள அரசமரத்தில் தொட்டில் கட்டி விட்டு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பாலமுருகரை பயபக்தியுடன் வேண்டி சஷ்டி விரதம் இருந்தால், பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும், நாகதோஷம் உள்ளவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள நாக தேவதையை வணங்கினால் தோஷம் விலகும். விரைவில் திருமணமும் கை கூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

தினமும் மூன்று கால பூஜை:

இக்கோயில் நடை தினமும் காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு முதல் கால பூஜை நடைபெறும். 12 மணிக்கு உச்சி கால பூஜை நடத்தப்பட்டு நடை சாற்றப்படும். தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு, 3ம் கால பூஜை நடைபெறும். இரவு 9 மணிக்கு தீபாராதனையுடன் நடை சாற்றப்படும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பாலமுருகருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது, பல்வேறு வேண்டுதலுக்கும், நேர்த்தி கடனை நிறைவேற்றவும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். தை கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, ஆடி கிருத்திகை, தை பூசம் ஆகிய தினங்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அன்று இரவு மின் அலங்காரத்துடன் சாமி வீதியுலா நடைபெறுகிறது.

பங்குனி உத்திர திருவிழா:


இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 8வது நாளான்று காலை செடல் உற்சவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, காவடி எடுத்தல், அலகு குத்துதல், செடல் இழுத்தல் என தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். தொடர்ந்து, அன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. 9வது நாள் நிகழ்வாக தெப்பல் உற்சவமும், நிறைவாக 10வது நாள் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இக்கோயிலின் குளம் காலாப்பட்டு இசிஆர் சாலையை யொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்துதான் ஒவ்வொரு முறையும் காவடி ஊர்வலம் தொடங்கி கோயிலை நோக்கி செல்கிறது.அதேபோல் இக்குளத்தில்தான் பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியான தெப்பல் உற்சவமும் நடக்கிறது.

எப்படி செல்வது?

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து கனகசெட்டிகுளம்,மரக்காணம் செல்லும் பேருந்தில் ஏறி, 15 கி.மீ.  தொலைவில் உள்ள காலாப்பட்டில் இறங்கி பாலமுருகன் கோயிலுக்கு செல்லலாம்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி