×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.10 லட்சம் கன அடியானது; மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டியுள்ளது. கர்நாடகாவில் கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளை மூழ்கடித்தவாறு மேட்டூர் அணை நோக்கி காவிரி பெருக்கெடுத்துச் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல், சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காணப்படுகிறது. இதையடுத்து, வருவாய்த்துரை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா போட்டு அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ தடை விதிக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 90,873 கனஅடியாக அதிகரித்ததால் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அணையின் வரலாற்றில் 68வது முறையாக நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று காலை 8 மணிக்கு 100.44 அடியாகவும், நண்பகல் 12 மணிக்கு 101.32 அடியாகவும், மாலை 4 மணிக்கு 102.10 அடியாகவும் இரவு 8 மணிக்கு 103.07 அடியாகவும் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் சுமார் 5 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 15,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகரித்து வருவதால், காவிரி கரையில் முகாமிட்டிருந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணை 100 அடியை எட்டியவுடன், இடது கரையில் உள்ள 16 கண் பாலம் பகுதியில் நீர்வளத்துறையின் செயற்பொறியாளர் சிவகுமார், அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் சிறப்பு பூஜை செய்து, மலர் தூவி வரவேற்றனர். அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.10 லட்சம் கன அடியானது; மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ogenakal watercourse ,Matur ,Mattur ,Karnataka ,Ogenakal Kaviri ,Ogenakal ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...