தாம்பரம்: தாம்பரம் அருகே பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவன் மீது லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தான். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. தாம்பரம் அடுத்த விஷ்ணு நகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவரது மனைவி பொன்னி. இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களது மகள் கீர்த்தனா. மகன் லட்சுமிபதி. இதில், கீர்த்தனா தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். லட்சுமிபதி அதேபகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். பள்ளிக்கு லட்சுமிபதி சைக்கிளில் சென்று வருவது வழக்கம். அதன்படி, நேற்று காலை லட்சுமிபதி பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டான். தாம்பரம்-முடிச்சூர் சாலை மற்றும் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை சந்திப்பு அருகே சாலையை கடக்க முயன்ற போது, அசுர வேகத்தில் வந்த கனரக லாரி, சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். இதை பார்த்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தாம்பரம்-முடிச்சூர் சாலை வழியே வந்த வாகனங்களை வழிமறித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த சிலர், அவ்வழியே வந்த லாரிகள் மீது கற்களை வீசி, கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், லாரி டிரைவர்களை கீழே இழுத்து தாக்க முயற்சித்தனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.தகவலறிந்த தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, அங்கிருந்து அப்புறத்தப்படுத்த முயற்சித்தனர். இதனால், ஆத்திரமடைந்த போதை ஆசாமி ஒருவர், உதவி ஆணையரின் கைகளை பிடித்து இழுத்தார். இதனால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர், லட்சுமிபதியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவர் மேற்கு தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த சந்திரசேகரனை (36) கைது செய்தனர்….
The post தாம்பரம் அருகே பரபரப்பு; பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது லாரி மோதி மாணவன் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலைமறியல்: லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.
