×

தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ஆய்வு; ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

வேலூர்: தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று வேலூரில் ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார். வேலூரில் மக்களவை தொகுதி பாஜ பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய தரைவழி மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஜவை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரு சில இடங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை-சேலம் 8வழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலம் 90 சதவீதம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டப்பணிகள் தொடங்கும். இத்திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு என்றால் ரத்து செய்யப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற மாநில அரசு கேட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே ஒன்றிய அரசின் இலக்கு. அதன்படி 2 ஆண்டுகளில் எலக்ட்ரானிக் முறையில் சுங்க வசூலிப்பு முறையை அமல்படுத்திய பின்னர் அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும். சென்னை விமான நிலைய புதிய முனையம் அமைக்கும் பணி முடிந்ததும் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும். அதேபோல் சென்னையில் பசுமை விமான நிலையம் அமைக்க இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எந்த இடம் எதிர்கால சூழலுக்கு ஏற்றதாக அமையும் என்பதை மாநில அரசு தெரிவித்தால் அங்கு சென்னை பசுமை விமான நிலையம் அமையும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டுவது தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி தந்தால், அதுதொடர்பாக ஒன்றிய அரசு முடிவெடுக்கும். அக்னிபாத் திட்டம் நன்மை பயக்கும் திட்டம். கார்கில் போரின்போது ஏற்படுத்தப்பட்ட பல ராணுவக்குழுக்கள் போன்றதுதான் இதுவும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக நடந்த பாராளுமன்ற தொகுதி பாஜ கூட்டத்தில்மாநில பாஜ நிர்வாகிகள் கார்த்தியாயினி, வெங்கடேசன், இளங்கோவன், தசரதன், மாவட்ட தலைவர் மனோகரன் உட்பட மாநில, மாவட்ட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் வி.கே.சிங் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பூரண கும்பமரியாதை வழங்கப்பட்டது. மேலும் கோயில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது….

The post தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ஆய்வு; ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Minister ,V.R. K.K. Singh ,Vellore ,Union Co-Minister ,V.V. ,K.K. Singh ,
× RELATED இந்திய அளவில் மின்வெட்டு குறைவான...