திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்(21). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கொசவன்பாளையம் கிராமத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் லாரியின் அடியில் இரு சக்கர வாகனத்துடன் மாணவன் கவின் சிக்கிக்கொண்டார். அப்போது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்து கொண்டிருந்த திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் உடனடியாக தனது வாகனத்தில் இருந்து இறங்கி லாரியின் அடியில் இரு சக்கர வாகனத்துடன் சிக்கியிருந்த மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவன் கவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகன விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர் செல்வம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மாணவனின் உயிர் பிழைத்தார். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு நன்றி தெரிவித்துகொண்டனர்….
The post வாகன விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனை மீட்ட போக்குவரத்து ஆய்வாளர் appeared first on Dinakaran.
