×

மூதாட்டியின் நகையை பறித்து கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி அம்மாள் (78). இவர் கடந்த 2.3.2015-ல் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் நாகராஜ் (29) வீட்டிற்குள் நுழைந்து ருக்மணி அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கம்மல், மோதிரம் உள்ளிட்ட நகையை பறித்ததோடு மட்டுமல்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்து வீட்டு தப்பி ஓடி உள்ளார். இது குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். இந்த திருட்டு மற்றும் கொலை சம்பந்தமான வழக்கு திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சி. ரவிச்சந்திரன் ஆஜராகி வாதாடி வந்தார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி கணபதி சாமி தீர்ப்பு வழங்கினார். அதில்  வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அத்துமீறி நுழைந்து கொலை செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் 449-ன் படி ஆயுள் தண்டனையும் இரண்டு ஆயிரம் ரூபாய் அபராதமும் கட்டத் தவறினால் ஆறு மாதங்கள் கூடுதல் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் நகை திருட்டில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் மூதாட்டி என்றும் பார்க்காமல் கொலை செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் எண் 302 இன் படி கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை, 2000 ரூபாய் அபராதம் மற்றும் கட்ட தவறினால் ஆறு மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து நகையை கொள்ளை அடித்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்டம் எண் 380 படி  ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்த நீதிபதி கணபதி சாமி இந்த அனைத்து தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ருக்மணி அம்மாவின் மகன் ஜெயச்சந்திரனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி கணபதி சாமி உத்தரவிட்டார். தீர்ப்புக்கு பின் குற்றவாளி நாகராஜை புழல் சிறையில் அடைத்தனர்….

The post மூதாட்டியின் நகையை பறித்து கொலை செய்த வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை: திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur 1st Additional District Sessions Court ,Tiruvallur ,Rukmani Ammal ,Periyapalayam ,Tiruvallur district ,Thiruvallur 1st Additional District Sessions Court ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!