×

தூய ரமலானே வருக..!

இஸ்லாமிய வாழ்வியல்

‘இதோ, இறையருளால் மீண்டும் ஒரு ரமலான் மாதம் நம்மிடம் வந்துவிட்டது.“ரமலான் மாதம் எத்தகையதென்றால் அந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக் கூடியதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. எனவே, இனி உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.” (குர்ஆன் 2:185)நோன்பு என்பதைக் குறிக்க அரபு மொழியில் அஸ் ஸவ்ம் எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் நிறுத்திக் கொள்ளல் என்பதாகும். வைகறை நேரத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல், இல்லற உறவில் ஈடுபடுதல் போன்றவற்றைத் தவிர்ப்பதே நோன்பு எனப்படுகிறது.

பருவமடைந்த ஒவ்வொரு முஸ்லிம் ஆண்- பெண் மீதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாகும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருந்தால் நோன்பைக் கைவிட அனுமதி உண்டு. ஆனால் விடுபட்ட நோன்பைக் கணக்கிட்டு இதர நாட்களில் நிறைவேற்றிவிட வேண்டும்.
இஸ்லாமிய வாழ்வியலின் ஐம்பெரும் கடமைகளுள் நோன்பும் ஒன்றாகும். இது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. உண்பதையும் பருகுவதையும் தவிர்ப்பது மட்டுமல்ல, மனக்கட்டுப்பாடு, இறையச்சம், இறையன்பு, ஏழை - எளிய மக்களுக்கு உதவுதல், பிறர் துயர் களையப் பாடுபடுதல் போன்ற அனைத்துப் பயிற்சிகளையும் உள்ளடக்கியதே நோன்பு.வேதம் அருளப்பட்ட மாதம் என்பதால் இந்தத் தூய ரமலான் மாதத்தில் அனைத்து வீடுகளிலும் இறைமறை ஓதப்படும் இனிய ஓசையைக் கேட்கலாம். அதே போல் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகையிலும் ஈடுபடுவார்கள். இந்தத் தராவீஹ் தொழுகையில் முப்பது நாட்களில் முழு குர்ஆனும் ஓதப்படும்.

ரமலான் தொடர்பாக முன்னோர்கள் குறித்து ஒரு சுவையான செய்தி சொல்லப்படுகிறது. இறைபக்தி நிறைந்த முன்னோர்கள் ரமலானுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அந்தத் தூய மாதத்தை வரவேற்கத் தயாராகிவிடுவார்களாம். வழிபாடுகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதற்காகத் தங்களின் உலகியல் காரியங்களை எல்லாம் ரமலான் வருவதற்கு முன்பாகவே இயன்றவரை நிறைவேற்றிவிடுவார்களாம்.“இறைவா, தூய ரமலான் வர இருக்கிறது. அந்தப் புனித மாதத்தில் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் நற்பேற்றை எங்களுக்கு அருள்வாயாக. முப்பது நாளும் முறையாக நோன்பு நோற்கும் வலிமையையும் உடல்நலத்தையும் எங்களுக்கு அருள்வாயாக. உன்னுடனான தொடர்பை மேன்மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பை வழங்குவாயாக” என்று மனம் உருகிப் பிரார்த்திப்பார்கள். இதோ, புனித ரமலான் வந்துவிட்டது. நேர்வழி சென்ற அந்த முன்னோர்கள் வழியில் நாமும் நடைபோட்டு இந்தப் புனித மாதம் முழுவதிலும் வழிபாட்டில் ஈடுபடுவோமாக.

சிராஜுல்ஹஸன்

Tags : Pure Ramanan ,
× RELATED பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா..!!