×

கடல் நுரையில் விநாயகர்

திருவலஞ்சுழி

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையால் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள். அந்த விநாயக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயக மூர்த்தி அருட் பாலிக்கிறார்.

 இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாயகரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், “மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்” என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஹேரண்ட முனிவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.


Tags : Vinayagar ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா