×

காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு

காரியாபட்டி: காரியாபட்டி அருகே சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான சமண பள்ளியின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புல்லூர் கிராமத்தில் பழமையான இடிந்த கோயில் ஒன்று இருப்பதாக உள்ளூரை சேர்ந்த போஸ்வீரா, மாரீஸ்வரன் கொடுத்த தகவலின்படி, பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மதுரை அருண்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அருண் சந்திரன் கூறியதாவது:இக்கோயிலை ஆய்வு செய்ததில் மொத்தம் 9 துண்டு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சுமார் 1,100 ஆண்டுகள் பழமையான இக்கல்வெட்டுகள் அனைத்தும் வட்டெழுத்து, கிரந்த எழுத்தால் எழுதப்பட்டுள்ளது. இரண்டு அரசர்களின் பெயர்கள் இக்கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. முற்கால பாண்டிய மன்னன் மாறன் சடையனின் நான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டும், ராஜராஜ சோழன் இக்கோயிலுக்கு கொடுத்த நிவந்தம் பற்றிய கல்வெட்டும், புல்லூரின் பழைய பெயர் திருப்புல்லூர் என்று இக்கல்வெட்டில் உள்ளது. மேலும் இது சமண பள்ளியாக செயல்பட்டு வந்துள்ளது. இக்கோயிலின் பெயர் திருப்புல்லூர் பெரும்பள்ளி என்றும், உள்ளிருக்கும் இறைவன் அருகர் பட்டாளகர் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.இக்கோயிலுக்கு நந்தா விளக்கு எரிக்க ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதும், பாண்டிய நாட்டில் சமண மதம் இருந்ததற்கு இச்சமண பள்ளியே சான்றாக உள்ளது. ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் குரண்டி திருக்காட்டாம்பள்ளி என்ற சமண பள்ளி கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள சமண பள்ளி, விருதுநகர் மாவட்டத்தின் 2வது சமண பள்ளியாகும். அருகே உள்ள குண்டாற்றின் மேல் கரையான மேல உப்பிலிகுண்டு கிராமத்தில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் சமணம் சார்ந்த வரலாற்று சான்றுகள் கிடைத்து வருவது சிறப்பானது. 9 துண்டு கல்வெட்டுகளை முறையாக படி எடுத்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் இச்சமண பள்ளியை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்….

The post காரியாபட்டி அருகே 1,100 ஆண்டு பழமையான சமண பள்ளி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Jain ,Gariyapatti Kariyapatti ,Kariyapatti.Virudunagar district ,Bullur ,Kariyapatti… ,Kariyapatti ,
× RELATED பழம்பெரும் மலையாள இசையமைப்பாளர் கே.ஜி.ஜெயன் இன்று காலமானார்