×

தம்பதியர் பிணக்கு தீர்க்கும் லட்சுமி நாராயண பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழாத்தூரில் செய்யாற்றின் மேற்கே இயற்கை எழில்கொஞ்சும் கிராமத்தில் உள்ளது ஸ்ரீபூமி நீளா சமேத லட்சுமி நாராயண பெருமாள். இக்கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக லட்சுமிநாராயண பெருமாள் மண்ணுக்குள் புதைந்து இருந்தார். இதையறிந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து பூமிக்கடியில் இருந்த லட்சுமி நாராயண பெருமாளை வெளியே எடுத்து புதிய கோயில் அமைத்தனர். கோயில் கிழக்கு முகம் நோக்கி அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயிலில் உள்ள சன்னதியில் கருடர் அருள்பாலிக்கிறார்.

மஹா மண்டபத்தில் பெருமாளுக்கு வலதுபுறம் லஷ்மிநாராயண பெருமாளும், இடது புறம் மஹாலஷ்மியும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் நடாதூர் அம்பாள், சந்தான வரத தேசிகன் திருக்கோலத்தில் மடியில் சுவாமி தேசிகருடன் சேவை சாதிக்கிறார். புண்ணியகோடி அமைப்பு விமானத்துடன் கூடிய கருவறையில் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பொங்கும் முகத்துடன், சங்கு, சக்கரம், அபய, ஹத்தம் முத்திரையுடன், 108 சாலிக்கிராம மாலைகள் அணிந்து வீற்றிருக்கிறார். அவரது மடி மீது தாயார் பூமி நீளா அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்திகளாக பூமி நீளா சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளும், ஸ்ரீதேவி , பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அருள் பாலிக்கின்றனர்.

கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி சங்கநிதி, லஷ்மி ஹயக்கீரிவர், மேற்கு நோக்கி லஷ்மி வராஹர், வடக்கு நோக்கி விஷ்ணு துர்கை மற்றும் பத்மநிதி சன்னதிகள் அமைந்துள்ளது. இக்கோயிலில் தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை ஆராதிப்பதால், கணவன்மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு இல்லறம் நடத்த, இத்தல பெருமாள் அருள்புரியக் கூடியவர் என்பதும் ஐதீகம். குறிப்பாக பெருமாளையும், தாயாரையும் அபிஷேகம்  ஆராதனை செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும்.

தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கோயிலுக்கு வரும் தம்பதியர், பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நன்றிக்கடனை கண்ணீர் மல்க செலுத்துகின்றனர். உற்சவ மூர்த்திகளான பூமி நீளா சமேத ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாளும், ஸ்ரீதேவி , பூதேவி சமேத வரதராஜ பெருமாளும் அனைத்து வரங்களையும் தரக்கூடியவர். வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகிய நாட்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இக்கோயில் செய்யாறிலிருந்து 6 கி.மீ தொலைவிலும், வந்தவாசியில் இருந்து 27 கி.மீ. தொலைவிலும் ஆரணி சாலையில் அமைந்துள்ளது.

Tags : Lakshmi Narayana Perumal ,
× RELATED மூலாதாரத்தில் நின்றருளும் அம்பிகை!