- அம்பிகா
- குண்டலினி
- நீலய பிரம்மகிரந்தி விபெத்தினி
- விபெத்தினி
- நீலய பிரம்மக்ரண்டி விபெத்தினி
- மணிபுரந்திருதிதா
- விஷ்ணுகராந்தி விபெத்தினி
- அஜ்னா சக்ரந்தரலஸ்தா
- ருத்ரக்ராந்தி விபெத்தினி
- கலியுகம்
மூலாதாரைக நிலயா
ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ
மணிபூராந்தருதிதா
விஷ்ணுக்ரந்தி விபேதிநீ
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா
ருத்ரக்ரந்தி விபேதிநீ
இந்த குண்டலினி என்கிற சக்தியை எழுப்புவதற்கு நல்ல குரு தேவை. மிக மிக கடுமையான உறுதி தேவை. இதெல்லாம் கலியுகத்தில் இருக்குமா என்பது தெரியாததால், கலியுகத்தை பொறுத்த வரையில் நாம் செய்கின்ற எல்லா சாதனைகளின் மூலமாகவும் இந்த விஷயம் நடக்கும். நாம் செய்கின்ற பாராயணம், குருவை தரிசிக்கிறோம். நாம சங்கீர்த்தனம், பூஜை செய்கிறோம், நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுகிறோம். ஏதோ ஒருவகையில் இந்த விஷயம் நடக்கும். அதனால், இது நடக்குமா… நடக்காதா என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். குண்டலினி என்பது அம்பாள் தானே… அம்மா தானே… எப்போது அம்மா நீ பார்த்துக்கோ… என்று கொடுத்து விட்டோமோ அப்போது அம்மா பார்த்துக் கொள்வாளே. நாம் போய் குண்டலினி விழித்துக் கொண்டு விட்டதா? மூலாதாரத்திற்கு வந்து விட்டதா? இப்போது எந்த இடத்தில் இருக்கிறது என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அதனால், எந்த சாதனை செய்தாலும், அம்மா… நீ பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டால் போதும். இந்த கிரந்தியை அவிழ்த்தல் அதாவது விபேதனமெல்லாம் அவள்தானே செய்யப் போகிறாள். அவளே சமைத்து அந்த சாப்பாட்டை ஊட்டியும் விடுவாளெனில், நமக்கென்ன கவலை. மேலே சொன்னதுதான் மூலாதாரைக நிலயா, ப்ரம்ம கிரந்தி விபேதிநீ என்று இரண்டு நாமங்களை பார்த்தோம். இதற்கு அடுத்து, மணிபூராந்த ருதிதா… அதாவது மணிபூரகம் என்று சொல்லக் கூடிய நாபி ஸ்தானம். இந்த மணிபூரக ஸ்தானத்திற்குள் பிரவேசம் செய்கிறாள். மணிபூராந்தர் உதிதா… உதிதா என்றாள் உதிக்கிறாள் என்று அர்த்தம். இப்போது சூரியன் உதிக்கும்போது கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் பொருளெல்லாம் தெரிகின்றதோ அதுபோல, அம்பாளினுடைய சைதன்ய சக்தி மணிபூரகத்தில் நமக்கு பட்டாலே, நமக்குத் தெரியாத விஷயங்களெல்லாம் தெரிய ஆரம்பிக்கும். ஒருசில glimpses வரத் தொடங்கும். உதாரணமாக ஒரு ஆழமான நூலை படிக்கலாம். அப்படி படிக்கும்போது அதிலுள்ள சூட்சுமமான விஷயங்
களெல்லாம் தெரிய வரும். ஏதோ ஒரு விஷயம் பார்க்கிறோம். அப்படி பார்த்தவுடனே இதனுடைய சூட்சுமம் இதுதான் என்று அதனுடைய விஷயம் தெரிந்து விடும். இப்படி தெரியாத விஷயங்களெல்லாம் தெரிய வரக் கூடியதெல்லாம், குரு அனுக்கிரகத்தால் மணிபூரகத்தில் அம்பிகையின் சைதன்யம்
பட்டுவிட்டால் நடக்கும். அதனால்தான் மணிபூராந்த ருதிதா… மணிபூரகத்தில் உதிப்பவள்.
அப்படி உதயமானவுடனே என்ன நடக்குமென்பதை அடுத்த நாமத்தில் பார்க்கலாம். இப்படி சூரிய கண்டத்தை அம்பிகை கடக்கும்போது, விஷ்ணு கிரந்தி என்கிற முடிச்சை அவிழ்த்து விட்டு விடுவாள். அதனாலேயே இந்த நாமமாக விஷ்ணு கிரந்தி விபேதிநீ என்று வந்துள்ளது. இதற்குப் பிறகு விசுக்தியும் ஆக்ஞாவும் சேர்ந்து ஒரு கண்டம். இந்த கண்டத்திற்குத்தான் சந்திர கண்டம் என்று பெயர். அந்த சந்திர கண்டத்திற்குள் அம்பாள் பிரவேசிக்கிறாள். விசுக்திக்குள் பிரவேசித்து, அதிலிருந்து ஆக்ஞாவிற்குள் பிரவேசிக்கிறாள். அதனால்தான், ஆக்ஞா சக்ராந்தரா லஸ்தா என்கிற பெயர் இங்கு வருகின்றது. இப்போது பிரித்துப் பார்த்தால், ஆக்ஞா சக்ர அந்த ராலஸ்தா. ஆக்ஞா சக்கரத்திற்குள் பிரவேசிப்பவள்.
இந்த ஆக்ஞா சக்கரத்திற்குள் பிரவேசிக்கும்போது என்ன நடக்குமெனில்,ருத்ர கிரந்த விபேதிநீ… ருத்ர கிரந்தி என்கிற முடிச்சை அவிழ்த்து விடுவாள். அப்போது இந்த ஆறு நாமாக்களும் அம்பிகையின் செயல்பாடுகளை காண்பிக்கின்றது.
மூலாதாரத்தில் குண்டலினியாக எழுந்து சுவாதிஷ்டானத்தை கடக்கும்போது பிரம்ம கிரந்தியை அவிழ்க்கிறது. மணிபூரகத்தையும் அநாகதத்தையும் கடக்கும்போது விஷ்ணு கிரந்தியை அவிழ்த்துச் செல்கிறது. விசுக்தியையும் ஆக்ஞாவையும் கடக்கும்போது ருத்ரக் கிரந்தியை அவிழ்க்கிறாள்,
இந்த நாமாக்கள் நமக்கு ஒரு insight கொடுக்கின்றன. அதாவது உள்ளொளியை அளித்துச் செல்கின்றன.
கிரந்தி என்றால் முடிச்சு என்று பார்த்தோம். இந்த ஜீவாத்மா கர்மாவினால் பிறப்பு கிடைக்கின்றது. பிரம்மா ஒரு தேகத்தை சிருஷ்டி செய்து அந்த ஜீவாத்மாவை பிறப்பு என்கிற ஜென்மாவிற்குள் அனுப்புகிறார். அப்படி அனுப்பும்போது இந்த ஜீவாத்மாவை இந்த தேகத்திற்குள் இணைக்க வேண்டும். எப்படி இணைக்க முடியும்? இங்கு தேகம் என்பது ஜட வஸ்து. ஜீவாத்மா என்பது சித் வஸ்து. இப்போது இந்த இரண்டையும் பிராணன் என்கிற முக்கிய வஸ்துவை வைத்துத்தான் இணைக்கிறார். அப்படி இணைத்ததற்கு பிறகு இந்த ஜீவாத்மாவிற்கு சூட்சும சரீரம் இருக்கிறது. அந்த சூட்சும சரீரத்திற்குள் மனம், தன்மாத்திரைகள், புத்தி போன்றவை உள்ளன. இந்த புத்தியில்தான் இந்த கர்மாவின் வாசனைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கர்மாவை வைத்துக் கொண்டு மனசு செயல்பட ஆரம்பிக்கின்றது. இந்த மனசு புத்தி தத்துவத்தை வைத்து செயல்படும். ஏன் புத்தி தத்துவம் எனில், இந்த புத்தி தத்துவத்திற்குள்தான் கர்மா என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் பாருங்கள்.
கர்மாவிற்கு தகுந்தபடி மனசு செயல் படும். மனசுக்கு தகுந்தபடி பிராணன் செயல்படும். அந்த பிராணனுக்கு ஏற்றபடி இந்த தேகம் செயல்படும். இதற்கெல்லாம் சாட்சியாக இந்த தேகம் இருக்கும். இப்படி மனசு, பிராணன், தேகம் மூன்றையும் வைத்துக்கொண்டு இந்த ஜீவன் என்ன செய்ய வேண்டும்?
தன்னுடைய சொரூபத்தை கண்டடைய வேண்டும். அப்படி கண்டடைந்தால்தான் இந்த மூன்றிலிருந்தும் விடுபட முடியும். பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியிலிருந்து விடுபட முடியும். இனிமேல், ஜென்மாவே இல்லாத நிலைக்குப் போக முடியும். அதனால், முடிந்த அளவிற்கு இந்த மூன்றையும் சொரூபத்தை அடையவே செயல்படுத்த வேண்டும். உதாரணமாக சாப்பாடு என்பது செயல்பாடு. ஆனால், அந்த சாப்பாட்டையே ரமண பகவான் சொன்னதுபோல், ‘‘சாப்பிடறவனும் சாப்பாடும் வேற இல்லைங்கற நினைப்போடு சாப்பிடு’’ என்று ரமண பகவான் உபதேசிக்கிறார். அப்படி ஒரு சாப்பாடு சாப்பிட்டால் அந்த சாப்பாடே ஒரு சாதனை ஆகிவிடுகிறதல்லவா? இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.
இந்த தேகம், மனசு, பிராணன் இந்த மூன்றுதான் இந்த ஜீவாத்மாவை கட்டி வைத்திருக்கிறது. இதற்குத்தான் கிரந்தி என்று பெயர். இந்த மூன்றும்தான் பெரிய முடிச்சு. அதனால்தான் தேகாத்ம புத்தி வருகின்றது. இந்த தேகம்தான் நான் என்று நினைக்க வைக்கின்றது. இதற்கு அடுத்து பிராணன் என்ற விஷயம் வருகின்றது. இந்த பிராணனே நான் என்று நினைத்துக்கொள்கிறோம். இதற்கு அடுத்து மனசு என்கிற விஷயம் வருகிறது. இந்த மனசுதான் நாம் என்று நினைத்துக் கொள்கிறோம்.
அம்பாள் என்ன செய்கிறாள்? இந்த மூன்றிலிருந்தும் நம்மை விடுவிக்கிறாள். இந்த தேகத்தோடு இருக்கும் கட்டை விடுவிப்பதுதான் பிரம்ம கிரந்தி விபேதிநீ. ஏனெனில், இந்த தேகம் பிரம்மாவினால் வந்தது. அவர்தானே இந்த சிருஷ்டியை செய்து கொடுத்திருக்கிறார். அப்போது பிரம்ம கிரந்தி என்பது இங்கு என்ன
வெனில், தேகாத்ம புத்தியே ஆகும்.(சுழலும்…)
ரம்யா வாசுதேவன் மற்றும் கிருஷ்ணா
