×

மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா துவங்கியது : சிறப்புப் பூஜைகளுடன் கொடியேற்றம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. தெப்ப உற்சவம் 21ம் தேதி நடைபெறுகிறது. மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா, நேற்று காலை 10.35 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயிலின் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் பட்டர்கள் கொடியேற்றி, தீபாராதனை காட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன், சுவாமியை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சித்திரை வீதிகளில் உலா வருவர். வரும் 21ம் தேதி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, அன்று அதிகாலை மீனாட்சியம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளுவார். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் சேவார்த்திகள் வடம் பிடித்து, தெப்பத்தை காலையில் இருமுறை சுற்றி வருவர்.

அன்று மாலை தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அன்று இரவு 8 மணியளவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, மீண்டும் ஒருமுறை தெப்பத்தை வலம் வருவார். 21ம் தேதி மீனாட்சி, சுந்தரேசுவரர் கோயிலில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் சென்று தெப்ப உற்சவம் நடைபெற்று இரவு கோயிலுக்கு திரும்பும் வரை, மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். விழா ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன் மற்றும் இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.

Tags : Tribal ,festival ,Meenakshi Amman temple ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி மீனாட்சி...