×

நானும் ஒரு அழகி விமர்சனம்

கிராமத்தில் தாயுடன் வசிக்கும் மேக்னா, அத்தை மகன் அருணிடம் டியூஷனுக்கு செல்கிறார். இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதை சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கான தேர்வு எழுத வெளியூர் சென்றிருந்த அருண் ஊருக்கு திரும்பியதும் அதிர்ச்சி அடைகிறார். பக்கத்து ஊர் நாட்டாமை குடும்பத்தின் வாரிசு ராஜதுரைக்கும், மேக்னாவுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. 5 வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாததால், மேக்னாவை மலடி என்று ஊரார் அவமானப்படுத்துகின்றனர்.

இதனால், மனைவியை அடித்து உதைத்து அம்மா வீட்டுக்கு அனுப்புகிறார் ராஜதுரை. ஊர் திரும்பும் மேக்னா கர்ப்பம் அடைகிறார். அதற்கு யார் காரணம்? குழந்தை பிறந்ததா என்பது மீதி கதை. கிராமத்து அழகு பெண்ணாக நடித்துள்ள மேக்னா, படத்தை தனியாளாக சுமந்துள்ளார். காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பது, மலடி என்று சொல்வதைக் கேட்டு கதறுவது, குழந்தைக்காக ஆவலுடன் காத்திருப்பது என்று, நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.

வேலைக்காக காத்திருக்கும் கிராமத்து படித்த இளைஞனை கண்முன் நிறுத்தியுள்ள அருண், நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பில் இன்னும் பயிற்சி பெற வேண்டும். நல்லவனாக வந்து வில்லனாக மாறும் ராஜதுரை, மேக்னாவின் அம்மா, அருணின் அம்மா நன்கு நடித்துள்ளனர். மற்றவர்கள் வசனத்தை ஒப்பித்துள்ளனர்.

வெள்ளந்தி கிராமத்தின் அழகை இயல்பாகப் பதிவு செய்துள்ளார், ஒளிப்பதிவாளர் மகிபாலன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ள பொழிக்கரையான்.க, திரைப்பட உருவாக்கத்தில் கவனம் செலுத்த தவறிவிட்டார். காட்சிகள் நாடகத்தனமாக நகர்கிறது. குழந்தைப்பேறு இல்லாததற்கு மனைவி மட்டுமே காரணம் இல்லை, கணவனுக்கும் பங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

The post நானும் ஒரு அழகி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Meghna ,Arun ,Nattam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நத்தம் அருகே தீ விபத்தில் குடிசை நாசம்