×

விதிமீறல், நெரிசல், விபத்துகளை குறைக்க நவீன தொழில்நுட்பத்துடன் சென்னையில் ரூ904.88 கோடி மதிப்பில் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு: 165 இடங்களில் தானியங்கி சிக்னல்கள் விரைவில் பணிகளை தொடங்க முடிவு

சென்னை: சென்னையில் ரூ904.88 கோடி செலவில் ‘நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ஐ.டி.எஸ்)’ என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஓரிரு மாதங்களில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, சென்னையில் 4 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது தொடர்பான திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சென்னை மாநகராட்சி கருத்து கேட்டிருந்தது. அத்துடன், சென்னை நகரம் முழுவதும் பொதுவாக உள்ள முக்கியமான பிரச்னைகளுக்கான தீர்வாக, வாகன நிறுத்த மேலாண்மை, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி, தனித்தடத்துடன் கூடிய விரைவு பஸ் போக்குவரத்து அமைப்பு, ஒருங்கிணைந்த பல்நோக்கு போக்குவரத்து அமைப்பு, தெருவிளக்குகள், கழிவுகளை குறைத்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை ஆகிய 8 திட்டங்களுக்கும் அனுமதி கோரப்பட்டது. அதற்காக https;//mygov.in அல்லது www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரிகள் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் வாக்களிக்க அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில், தொலைத்தொடர்பு அமைப்பு (டி.ஐ.எம்.ஸ்- டெலி கம்யூனிகேஷன் இன்ஸ்ட்ரக்‌ஷனல் மாடலிங் சிஸ்டம்) உதவியுடன் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு விரைவில் நடைமுறைக்கு வரும், என சென்னை மாநகராட்சி அறிவித்தது. அதன்படி, நிகழ்நேர போக்குவரத்தின் அடிப்படையில் சிக்னல்களை மாற்றும் அடாப்டிவ் ட்ராபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு சென்னையின் பிரதான 165 சந்திப்புகளில் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளது.இந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டத்துக்கு (ஐ.டி.எஸ்) ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெ.ஐ.சி.ஏ) மற்றும் மாநில அரசு இணைந்து நிதியளிக்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ904.88 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கான “திட்டச் செலவு ஆரம்பத்தில் ரூ660 கோடியாக இருந்தது. இருப்பினும், எம்டிசி மற்றும் காவல் துறை உட்பட அனைத்து துறைகளுடன் கூட்டம் நடத்திய பிறகு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அசல் திட்டத்தில் இல்லாத சில விதிமீறல்கள் தொடர்பான அறிவிப்புகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், வேக வரம்பு மீறல் அமைப்பு மற்றும் சிவப்பு விளக்கு மீறல் கண்டறிதல் போன்ற கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், திட்டச் செலவு அதிகரித்துள்ளது. அதனால், தற்போது திட்டச்செலவு மதிப்பு ரூ904.88 கோடி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் முக்கியமான அமைப்பு, போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (டி.ஐ.எம்.எஸ்) மற்றும் நகர பேருந்து அமைப்பு (CBS) ஆகும். டி.ஐ.எம்.எஸ்-ன் கீழ், நிகழ்நேர போக்குவரத்தின் அடிப்படையில் சிக்னல்களை மாற்றும் அடாப்டிவ் டிராபிக் சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு, சென்னையின் முக்கிய 165 சந்திப்புகளில் நிறுவப்படும்.தற்போது, சிக்னல்களை மாற்றுவது கைமுறையாக அல்லது நிலையான நேரங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது. இது ஆட்டோமேட்டிக்காக செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. இது 3,500 பேருந்துகளில் கண்காணிப்பு அமைப்பு, 71 டெர்மினல்களில் பயணிகள் தகவல் அமைப்பு மற்றும் 31 டெப்போக்களில் 532 பேருந்து தங்குமிடங்கள் மற்றும் மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை கண்காணிக்கும். பேருந்து கண்காணிப்பு அமைப்பு மற்றும் பயணிகள் தகவல் அமைப்பு இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இது பேருந்துகளின் நிகழ்நேர இயக்கத்தை பயணிகள் அறிந்துகொள்ள உதவும்.டிப்போ மேலாண்மை அமைப்பின் கீழ், எம்டிசி பேருந்துகளின் நிலையை தவிர, தங்கள் ஊழியர்களின் செயல்திறனையும் கண்காணிக்க முடியும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான  ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி விரைவில் வழங்க உள்ளதாகவும், அதற்காக 3  நிறுவனங்கள் ஜூன் 10ல் ஏலம் சமர்ப்பித்து, தொழில்நுட்ப மதிப்பீடு நடந்து  வருகிறது. ஓரிரு மாதங்களில் இறுதி செய்யப்படும்,” என, மாநகராட்சி  அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post விதிமீறல், நெரிசல், விபத்துகளை குறைக்க நவீன தொழில்நுட்பத்துடன் சென்னையில் ரூ904.88 கோடி மதிப்பில் நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு: 165 இடங்களில் தானியங்கி சிக்னல்கள் விரைவில் பணிகளை தொடங்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...