நாகை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊரில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளுக்கு கருவறையில் உள்ள பல்லி சத்தம் மூலம் உத்தரவு தருகிறார் காஞ்சமடை அய்யனார். சுமார் 300 வருடங்களுக்கு முன் நெல் மூட்டைகளை வயலில் இருந்து வண்டியில் ஏற்றிக்கொண்டு திருச்சிற்றம்பலம் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மாட்டு வண்டியில் முன்பாரம் போதுமானதாக இல்லாததால் வழியில் கிடந்த ஒரு கல்லை வண்டியின் முன் பகுதியில் வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்தக் கல் ஒரு திடலில் விழுந்தது. அந்த கல்லை தூக்க முயன்றார். முடியவில்லை. மாட்டு வண்டி ஓட்டி வந்த விவசாயி, அப்பகுதியில் கூலி வேலை பார்த்து கொண்டிருந்த சிலரை துணைக்கு அழைத்தார். அப்போதும் அந்த கல்லை நகர்த்தக்கூட முடியவில்லை. அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது, அது தெய்வசக்தி உடைய கல் என்று. அந்த கல்லை ஒரு சிற்பியை விட்டு சீர் செய்தனர். உருவம் வந்தது.
அதே இடத்தில் ஒரு ஓலைக் குடிசைப் போட்டனர். அய்யனார் உருவனார். ஊர் மக்கள் அந்த அய்யனாருக்கு பூஜைகள் செய்தனர். அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வந்தனர். வயல் பரப்பு வெளியில் தண்ணீரே செல்லாமல் காய்ந்து இருந்த குளத்து மடை பகுதியில் விழுந்த கல்லில் உருவான அவர், மழையில் நனைந்தார். வெயிலில் காய்ந்தார். ஆண்டுகள் சில கடந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயின் கனவில் தோன்றி ஆலயம் கட்டச்சொன்னார் அய்யனார். அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது கனவில் தோன்றி, நான், வயல்வெளித்திடலில் கேட்பாரற்று கிடக்கிறேன் “எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். உங்கள் ஊரை காத்து நிப்பேன்” என்றார். ஊர் மக்கள் ஒன்று கூடி அய்யனாருக்கு கோயில் எழுப்பினர்.
திருச்சிற்றம்பலம் குமாரமங்கலம் சாலையில் உள்ளது இந்த அழகிய அருள்மிகு காஞ்சமடை அய்யனார் ஆலயம். ஆலயத்தின் வெளியே, கருவறைக்கு எதிரில் பெரிய, உயரமான குதிரைச் சிலை உள்ளது. அருகே சங்கிலி கருப்பண்ணன் திருமேனி உள்ளது. ஆலயத்தின் வலது புறம் வீரன் தனிச்சந்நதியில் அருள்பாலிக்கிறார். இந்த வீரனுக்கு வேண்டிக்கொண்டு ஆடு, சேவல், பலியிட்டு, அங்கேயே சமைத்து சாப்பிட்டுச் செல்லும் பழக்கம் அந்த ஊர் மக்களின் பழக்கமாக உள்ளது. சாலையில் வெட்ட வெளியில் கோயில் உண்டியல் உள்ளது. இதுவரை களவு போனதில்லை. பச்சைப் பசேலாய் காட்சி தரும் வயல் வெளிகளையும், கருப்பஞ்சோலைகளையும் கடந்துதான் இந்த ஆலத்திற்குச் செல்ல வேண்டும்.
இந்த அய்யனார், இப்பகுதி மக்களில் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறார். தினசரி இங்கு ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இரவு நடுச்சாம நேரங்களில் மெல்லிய மணியோசையுடன் அய்யனார், ஊரில் வலம் வருவதாகவும், குதிரையின் காலடி ஓசையும், மணி ஓசையும் கேட்பதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர். ஆடிக் கடைசி வெள்ளியில் அந்த ஊர் மற்றும் சுற்று வட்டார கிராம காவல்காரர்கள் இங்கு ஒன்று கூடுகின்றனர். தங்கள் சார்பாக சேவல் பலியிட்டு, விழா கொண்டாடி, சமைத்து சாப்பிட்டு கலைந்து செல்கின்றனர். இறைவனின் கருவறையில் நிறைய பல்லிகள் வாசம் செய்கின்றன.
இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அய்யனாரிடம் முறையிட்டு துதிக்கும் போது, ஏதாவது ஒரு பல்லி ஓசை கொடுக்கும். அந்த ஓசை அய்யனார் தரும் உத்தரவு என அவர்கள் நம்புவதுடன், அவர்கள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதும் கண் கூடான உண்மை என்கின்றனர். அய்யப்பன் மலைக்கு மாலை போட்டு செல்ல ஊர்மக்கள் முதலில் இங்கு வந்து அய்யனாரை தரிசித்துவிட்டு, பின்னரே இரு முடிகட்டும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. வெளி நாட்டிற்கு பணி நிமித்தம் செல்வோர் இங்கு வந்து அய்யனாரை வழிபட்ட பின்னரே புறப்படுகின்றனர். இந்தக் கோயில் நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பந்தநல்லூர் வழிதடத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.
ஜெயவண்ணன்