×

கழுகுமலையில் பால்குட ஊர்வலம்

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் குமரவேலுக்கு 80 வது ஆண்டு பாலாபிஷேக விழா நடந்தது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமாகும் இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார திங்களன்று குமரவேலுக்கு பாலாபிஷேக விழா நடைபெறும். கார்த்திகை கடைசி திங்கள் சோமவாரமான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 6.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்பாளை எழுந்தருளச்செய்யும் பூஜைகள் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மேல் சுப்பிரமணிய பூஜையும், சிறப்பு கந்த ஹோமமும் நடந்தது.  தொடர்ந்து 10 மணிக்கு மேல் வடக்கு ரத வீதியில் உள்ள அலங்கார பந்தலில் இருந்து பால்குடங்கள் புறப்பட்டு திரளான பக்தர்கள் கிரிவலம் வந்து கழுகாசலமூர்த்தி கோயிலை அடைந்தனர். பகல் 12 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், பாலாபிஷேகங்களும், அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. பூஜைகளை பரமேஸ்வர பட்டர், கார்த்திகேய பட்டர், மூர்த்தி பட்டர் ஆகியோர் செய்தனர். ஏற்பாட்டினை வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர். கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் செண்பகராஜ், பரமசிவம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ராஜயோகம் தரும் ராகு – கேது