×

வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி அதிரடி சோதனை: வெளிநாட்டு முதலீட்டிற்கான ஆவணங்கள், பல கோடி ரொக்கம் சிக்கியதாக தகவல்

சென்னை: பல கோடி வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எம்.ஜி.எம். குழுமத்திற்கு சொந்தமான சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு தீவுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் சிக்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எம்ஜிஎம் குழுமத்திற்கு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் எம்.ஜி.எம் பொழுதுபோக்கு பூங்கா, எம்.ஜி.எம். ரிசார்ட், மதுபான தொழிற்சாலை மற்றும் திண்டிவனம், காஞ்சிபுரம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திரா உள்பட தமிழகம் முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எம்.ஜி.முத்து சென்னை துறைமுகத்தில் கூலி வேலையாக பணியில் சேர்ந்து தனது உழைப்பால் தொழிலதிபராக உயர்ந்தார். எம்.ஜி.முத்து இறப்புக்கு பிறகு அவரது மகன் நேசமணி முத்து எம்.ஜி.எம். குழுமத்திற்கு இயக்குனராக உள்ளார்.இவரது காலத்தில் தான் எம்.ஜி.எம். குழுமம் ரியல் எஸ்டேட், மதுபான தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்து அசுர வளர்ச்சியடைந்தது. இந்த குழுமம் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது வருமானத்தை ஒன்றிய அரசுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் எம்.ஜி.எம் குழுமத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குழுமம் சார்பில் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.இதையடுத்து எம்.ஜி.எம். குழுமத்திற்கு சொந்தமான பொழுது போக்கு பூங்கா, ரிசார்ட்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலை, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மயிலாப்பூர் சாந்தோம் முத்துபாண்டி அவென்யூவில் உள்ள எம்.ஜி.எம். குழுமத்தின் இயக்குனர் நேசமணி முத்துவின் வீடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் வீடுகளில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம். பொழுது போக்கு பூங்காவில் காலை சுற்றுலாவுக்கு வந்த பொதுமக்கள் யாரையும் பூங்காவிற்குள் நுழைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதேபோல் உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல் எம்.ஜி.எம். குழுமத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள எம்.ஜி.எம். குழுமத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான தொழிற்சாலை தலைமை அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்கள், பெங்களூரு, ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களிலும் சோதனை நடந்தது. அதேபோல், நெல்லை, திண்டிவனம் பகுதியில் உள்ள நிறுவனங்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரூ, ஆந்திராவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்த நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என எம்.ஜி.எம். குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. மதுபான தொழிற்சாலையிலும் காலை முதல் இரவு வரை சோதனை நடந்தது. இதனால் தொழிற்சாலைக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் யாரையும் உள்ளே விடவில்லை. தொழிற்சாலைகள் முன் ஊழியர்கள் காத்துக் கிடந்தனர். சோதனை நடைபெறும் பெங்களூரு, ஆந்திரா மற்றும் தமிழகம் உள்பட 40 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.எம்.ஜி.எம் குழுமத்தில் நள்ளிரவு வரை நடந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துகள் குவித்ததற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு தீவுகளில் முதலீடுகள் செய்ததற்கான ஆவணங்கள், ரொக்கப் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுது போக்கு பூங்காவில் இரண்டு விதமான கணக்குகள் பராமரித்து வந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் கணினியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர ரொக்க பணம், தங்க நகைகள், மதுபான தொழிற்சாலையின் வரவு மற்றும் செலவு கணக்குகள் என கைப்பற்றப்பட்ட அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த கணக்காய்வு முடிந்த பிறகு தான் எம்.ஜி.எம். குழுமம் எத்தனை கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தது என்று தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.* எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, ரிசார்ட்கள், மதுபான தொழிற்சாலை உள்ளிட்ட நிறுவனங்கள், அலுவலகங்கள், நிர்வாக இயக்குனர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடந்தது.* காலை முதல் நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்….

The post வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் ஐடி அதிரடி சோதனை: வெளிநாட்டு முதலீட்டிற்கான ஆவணங்கள், பல கோடி ரொக்கம் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : MGM Group ,CHENNAI ,MGM ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...