கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கும்பலின் ஒரு பிரிவினரை காவல்துறை கைது செய்தது. 390 கொள்ளைகள், 108 கொலைகள், 90 பாலியல் பலாத்கார வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ஒரே கும்பலுக்கு 6 முறை மரண தண்டனை விதித்தது. குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் மோசமான நிலைக்கு ஆளானார்கள். கும்பலில் இருந்த அனைவரும் எழுதப் படிக்க தெரியாத சாதாரண தினக்கூலிகள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் இது.
8 பேர் கொண்ட கொடூர கும்பலை வழிநடத்தும் பயங்கர குற்றவாளி, சுமன் ரங்கநாத். பொதுமக்களை சித்ரவதை செய்து நகை, பணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களைப் பறிப்பதும், பிறகு சம்பந்தப்பட்டவர்களை வெட்டிச் சாய்ப்பதும் அவர்களின் குறிக்கோள். இவர்களை கூண்டோடு பிடிக்க, டைகர் வெங்கட் என்ற சிறப்பு போலீஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். இந்நிலையில், பழிவாங்கும் வெறியுடன் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் கும்பல் புறப்படுகிறது. கொடூர கும்பலை டைகர் வெங்கட் கைது செய்தாரா என்பது மீதி கதை. அநியாய செயல்களில் அசால்ட்டாக ஈடுபட்டு, அப்பாவி மக்களை கழுத்தறுத்து கொல்லும் கொடூர வேடங்களில் சுமன் ரங்கநாதன், சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார் ஆகியோர் மிரட்டலாக நடித்துள்ளனர். சுருட்டு, மது என்று இயல்புக்கு மீறி நடித்து அதிர வைத்துள்ளனர்.
சிறப்பு போலீஸ் அதிகாரி டைகர் வெங்கட், குற்றவாளிகளை தப்பித்து ஓடவிட்டு சுட்டு தன் கடமையை ஆற்றியுள்ளார். சில காட்சிகளில் அவரது ஓவர் ஆக்டிங் நெருடுகிறது. ஒரு பாடலுக்கு முமைத்கான் ஆடியுள்ளார். பூஜா காந்தி, ‘கல்கி’ ஸ்ருதி, ரவிசங்கர், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாலே போன்றோரும் நடித்துள்ளனர். குற்றச்சம்பவங்கள் ஓவராக இருக்கிறது. பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்காட்சிகளைக் குறைத்திருக்கலாம். பி.இளங்கோவன் ஒளிப்பதிவும், ஜித்தின் கே.ரோஷன் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப ஒத்துழைத்துள்ளன. டைகர் வெங்கட், கே.டி.நாயக் இணைந்து இயக்கியுள்ளனர்.
The post தண்டுப்பாளையம் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.