×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா : ஐயங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவத்தின் நிறைவாக, ஐயங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக, கடந்த 23ம் தேதி தீபமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் கடந்த மூன்று நாட்களாக தெப்பல் உற்சவம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, கடந்த 24ம் தேதி இரவு சந்திரசேகரரும், நேற்று முன்தினம் இரவு பராசக்தி அம்மனும் தெப்பலில் பவனி வந்து அருள்பாலித்தனர். தொடர்ச்சியாக, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் இருந்து அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர், சன்னதி தெரு, ஐயங்குளத்தெரு வழியாக ஐயங்குளத்தை அடைந்தார். அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், ஐயங்குளத்தில் மூன்று முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளத்துக்குள் இறங்க பக்தர்களை அனுமதிக்காமல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் நிறைவாக சண்டிகேஸ்வரர் உற்சவம் இன்று இரவு (செவ்வாய்) நடக்கிறது. பஞ்ச மூர்த்திகளில் ஒருவராக தீபத்திருவிழாவில் பவனி வந்து அருள்பாலித்த சண்டிகேஸ்வரர், வெள்ளி ரிஷப வாகனத்தில் மாடவீதியில் இரவு வலம் வருகிறார். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் உடன் பவனி வருகிறார்.

Tags : Karthikai Deepavathirayil ,Thiruvannamalai ,
× RELATED சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபர்...