×

இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?.. டிவிட்டர் பதிவால் நெட்டிசன்கள் கருத்து

சென்னை: இளையராஜாவை ஏ.ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தாக்கியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பதால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தனது பாடல்களுக்காக இளையராஜா காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தனது பாடல்கள் அனைத்தும் தனக்கே சொந்தம் என அவர் தரப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ‘பாடல்களுக்கான உரிமை தங்களுக்கே உரியது என பாடலாசிரியர்களும் கேட்டால் என்ன ஆகும்’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே சினிமா விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ‘சில சமயம் ஒரு பாடலுக்கு இசையை விட மொழிதான் பெரிதாக இருக்கும்.

இதை புரிந்துகொண்டவர் ஞானி. புரியாதவர் அந்ஞானி’ என குறிப்பிட்டார். அவர் இளையராஜாவைத்தான் சொல்கிறார் என பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இளையராஜாவின் தம்பியும் இசையமைப்பாளருமான கங்கை அமரன், ‘இளையராஜாவால் வளர்ந்தவர் வைரமுத்து. அவருக்கு இப்போது கர்வம் அதிகரித்துவிட்டது. அவர் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நடப்பது வேறு’ என்று கோபமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ‘சில கற்றார் பேச்சும் இனிமையே’ என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் மறைந்த நடிகர் குமரிமுத்து பேசுகிறார். அவர் நாலடியார் பாடலை அதில் குறிப்பிடுகிறார்.

அதன் பாடலின் அர்த்தம், ‘யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம், நீங்கள் படித்தவர்கள்தான், இல்லை என்று சொல்லவில்லை, சில நூல்களை மட்டுமே கற்றவர், பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள். பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள், ஒரு பெரிய சூரியனின் ஒளியில் இருந்து காப்பது சிறு குடை தான்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பாடலின் வீடியோவை இப்போது ரஹ்மான் வெளியிட்டதற்கு காரணம், அவர் இளையராஜாவை மறைமுகமாக தாக்குகிறார் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அவர், இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன் ஆகிய மூவரையும்தான் சொல்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள். ரஹ்மானின் இந்த வீடியோ பதிவால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

The post இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா ஏ.ஆர்.ரஹ்மான்?.. டிவிட்டர் பதிவால் நெட்டிசன்கள் கருத்து appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : AR Rahman ,Ilayaraja ,Twitter ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நண்பன் ஒருவன் வந்த பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதியுடன் முஸ்தபா… முஸ்தபா