×

இறை நம்பிக்கையாளரைத் திட்டுவது பாவம்!

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைகள் பல “கட்டளைகள்” எனும் அடிப்படையில் நபிமொழித் தொகுப்பு நூல்களில் பதிவாகியுள்ளன. அவ்வாறு அமைந்த சில அறிவுரைகள் (கட்டளைகள்) வருமாறு: நபிகளார்(ஸல்) கூறினார்கள்: “சொற்களில் சிறந்தது இறைவனின் சொல்லாகும். செயல்களில் சிறந்தது முஹம்மதாகிய என்னுடைய செயலாகும். “எச்சரிக்கை! மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக உருவாக்கப்படும் நவீனங்கள் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். செயல்களில் மிகவும் தீயது மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நவீனம்தான். அத்தகைய நவீனம் ஒவ்வொன்றும் அநாச்சாரம் (பித்அத்) ஆகும். ஒவ்வொரு அநாச்சாரமும் வழிகேடுதான்.

“எச்சரிக்கை! ஆயுள் மீதான உங்களின் எதிர்பார்ப்பு நீண்டு, உங்களின் உள்ளங்கள் இறுகிக் கல்லாகிவிட வேண்டாம். “அறிந்து கொள்ளுங்கள். எது இனி வரப்போகிறதோ அதுவே அருகில் உள்ளதாகும். எது இனி வராதோ அதுவே தொலைவில் உள்ளதாகும். “அறிந்து கொள்ளுங்கள். நற்பேறு அற்றவன் என்பவன் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது நற்பேறு அற்றவன் என்று எழுதப்பட்டுவிட்டவனே ஆவான். நற்பேறு பெற்றவர் என்பவர் பிறரின் வாழ்விலிருந்து படிப்பினை வழங்கப் பெற்றவரே ஆவார். “எச்சரிக்கை. இறைநம்பிக்கையாளனைக் கொலை செய்வது இறைமறுப்பு போன்ற செயலாகும். இறை நம்பிக்கையாளரைத் திட்டுவது பாவமாகும்.

“முஸ்லிம் ஒருவர் தம் சகோதரரிடம் கோபம் கொண்டு மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. “எச்சரிக்கை. பொய் பேசவேண்டாம் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், பொய் வினையாகப் பேசுவதற்கும் தகுதியற்றது; விளையாட்டாகப் பேசுவதற்கும் தகுதியற்றது. ஒருவர் தம் சிறுபிள்ளையிடம் ஏதேனும் வாக்களித்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் பொய் தீமைகளுக்கு வழிவகுக்கும். தீமைகள் நரகத்திற்கு வழிவகுக்கும். “உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்துக்கு வழிகாட்டும். இதனால்தான் உண்மை பேசுபரைக் குறித்து, அவர் ‘உண்மை சொன்னார்... நன்மை செய்தார்...’ என்று சொல்லப்படுகிறது. பொய்யனைப் பற்றி, ‘அவன் பொய்யுரைத்தான்... தீமை புரிந்தான்…’ என்று கூறப்படுகிறது.” (ஆதாரம்: இப்னு மாஜா, முன்னுரை) நபிமொழி.

இந்த வார சிந்தனை


“யார் தம் பண்பை அழகாக்கிக் கொள்கிறாரோ அவருக்காக சொர்க்கத்தின் மேற்பகுதியில் ஒரு மாளிகை எழுப்பப்படும்.”

 சிராஜுல்ஹஸன்

Tags :
× RELATED பக்தனின் முற்பிறவி ஆசையை நிறைவேற்றிய சாய் பாபா..!!