×

திண்டிவனத்தில் துணிகரம் வீடு, கடைகளை உடைத்து 12 பவுன் நகை, 25 செல்போன்கள், ₹1 லட்சம் கொள்ளை

திண்டிவனம் : திண்டிவனத்தில் வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து 12.5 பவுன் தங்க நகைகள், 25 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் மரக்காணம் சாலை, மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(45), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் கடந்த 3ம் தேதி குடும்பத்துடன் வேலூர் சென்றவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12.5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய கொள்ளையர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: திண்டிவனம் நேரு வீதியில் அமானுல்லா மகன் அசைன்(32) என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றவர், நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் ஷட்டரில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விலை உயர்ந்த 25 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மற்றும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதேபோல் திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகர் பகுதியில் ரமேஷ் மனைவி ஜெயந்தி (44), என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். ஒரு வீட்டில் கிருபாகரன் என்வர் வாடகைக்கு உள்ளார்.மற்றொரு வீட்டில் வீட்டின் உரிமையாளரான ஜெயந்தி தனது கடை சாமான்கள் மற்றும் இதர பொருட்கள் வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று கிருபாகரன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ள நிலையில், ஜெயந்தி கடை மற்றும் வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது வீட்டின் கேட் மற்றும் கிருபாகரன் வீடு, ஜெயந்தி வீடு, கடையை உடைத்து ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து ரோசணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொள்ளையன் தப்பி ஓட்டம்?திண்டிவனம் ரயில்நிலைய நடைமேடை எண்.3ல் அமர்ந்திருந்த மர்ம நபரிடம் ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தபோது, அதில் புதிய செல்போன்கள் மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. இதனிடையே அந்த மர்ம நபர் பையை போட்டுவிட்டு, போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த பையை ரயில்வே போலீசார், செங்கல்பட்டு ரயில்வே இருப்புப்பாதை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் போலீசார், செங்கல்பட்டு ரயில்வே காவல்நிலையத்தில் இருந்து கத்தி, 25 செல்போன்களுடன் கூடிய பையை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post திண்டிவனத்தில் துணிகரம் வீடு, கடைகளை உடைத்து 12 பவுன் நகை, 25 செல்போன்கள், ₹1 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Venture house ,Thindivanam ,Kandivanam ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...