×

காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை

சென்னை: ஈசிஆர் பகுதியில் காரில் வந்தபோது போதை பவுடருடன் அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் கைதானார். இதில் அவருடன் வந்தவரும் சிக்கினார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மற்றும் பிற வாகனங்களில் போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி வடசென்னை பகுதியில் அதிகளவு போதை பவுடர் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு வந்த வண்ணம் உள்ளன. அதன் அடிப்படையில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை ஈசிஆர் பகுதியில் காரில் வந்த 2 பேரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

சந்தேகத்தின்பேரில் அவர்களது பையை சோதனை செய்தபோது அதில் 10 கிராம் மெத்தபேட்டமைன் போதை பவுடரை இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீனின் அண்ணன் மகன் ராகுல் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை சிமென்ட்ரி சாலையைச் சேர்ந்த காதர் மொய்தீன் (31) என்பது தெரியவந்தது. இதில் காதர் மொய்தீனிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலி மூலம் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன் என்பவரிடம் இருந்து போதை பவுடரை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

காதர் மொய்தீன் மீது திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை ஆகிய காவல்நிலயங்களில் போதை பவுடர் கடத்திய வழக்கு ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக சுல்தான் அலாவுதீன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. போதை பவுடருடன் அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கைதானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சர்வதேச கும்பலுடன் தொடர்பு?
கைதான ராகுல் தனது தந்தையின் மீன் வலை கம்பெனியை மேற்பார்வை செய்ததுடன், நீச்சல் குளங்களை பராமரிப்பதற்கான கெமிக்கல் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக ஒருமுறை தாய்லாந்து சென்று வந்ததாகவும் போலீசாரிடம் ராகுல் வாக்குமூலம் அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே சர்வதேச போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இதனால் தனிப்படை போலீசார் திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டில் 2 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர்.

* செல்போன் தரவுகள் அழிப்பு
முன்னதாக ராகுலை போலீசார் கைது செய்தபோது, அவர் போதைப்பொருள் விற்பனை தொடர்பான தனது வாட்ஸ்அப் சாட்டிங்குகளை அழித்துள்ளார். பிறகு போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ராகுல் செல்போனில் இருந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பான உரையாடல்களின் தகவல்களை பெற்றனர். மேலும் அவரது செல்போனை சைபர் லேப்-பில் ஆய்வுக்கு உட்படுத்தி அவரது வெளிநாட்டு தொடர்புகள் குறித்தும் விசாரிக்க உள்ளனர். போதைப் பொருள் வியாபாரத்தில் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக ராகுல் சாட்டிலைட் போன் பயன்படுத்தி வந்தாரா? எனவும் விசாரணை நடக்கிறது.

The post காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,-minister ,CHENNAI ,Jayakumar ,ECR ,Tamil Nadu ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி