×

நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி புதுச்சேரி- திண்டிவனம் ரோட்டில் வழிப்பறியில் ஈடுபடும் மர்ம கும்பல் பொதுமக்களே உஷார்: கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம்

புதுச்சேரி, பிப். 24: புதுச்சேரி- திண்டிவனம் ரோட்டில் நூதனமாக கார்களை நள்ளிரவில் மடக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மர்மகும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் உஷாராக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் இதுபோன்ற நூதனமாக கொள்ளை சம்பவங்களில் ஒரு மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது. அதாவது இரவு 11 மணிக்கு மேல் 4 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வரும் வழியில் இரும்பை சிவன் கோயிலில் இருந்து டோல்கேட் வரையிலான இடைப்பட்ட இருட்டான பகுதிகளில் இந்த துணிகர கொள்ளை சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ஒரு குடும்பம் இரவு 12.30 மணியளவில் அவ்வழியாக காரில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஒரு ஆசாமி திடீரென கல்லை எடுத்து அந்த வாகனம் மீது வீசியுள்ளார்.

அந்த கல், கார் கண்ணாடி மீது பட்டதில் உடைந்து நொறுங்கிய நிலையில் அந்த நபருக்கு அருகில் 4 பேர் பதுங்கியிருப்பது தெரியவரவே வழிப்பறி கும்பல் என அறிந்து உஷாரான குடும்பத்தினர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக கொள்ளை சம்பவத்தில் இருந்து தப்பினர். இதேபோல் வெளிநாடு ஆன்மீக சுற்றுலா செல்லும் ஒரு குடும்பத்தினர், சென்ைன விமான நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு வாடகை காரில் பயணித்துள்ளனர். அவர்கள் இரும்பை சிவன் கோயில் அருகே வந்தபோது 2 பைக்கில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கும்பல், மூடப்பட்டிருந்த கார் சைடு கண்ணாடிகளை வேகமாக தட்டி, தண்ணீர் வேண்டுமென்று சைகை காட்டியுள்ளனர். ஆனால் ஏற்கனவே கொள்ளை சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருந்த வாடகை காரின் டிரைவர், கதவை திறக்க வேண்டாமென கூறியதோடு வண்டியை வேகமாக இயக்கியதால் அக்கும்பலிடம் இருந்து தப்பினர்.

இதுதவிர மற்றொருவர் சொந்த வாகனத்தில் தனியாக சென்னை சென்றுவிட்டு அதிகாலை 3.30 மணியளவில் புதுச்சேரி திரும்பிக் கொண்டிருந்த நிலையில் இரும்பை அருகே வந்தபோது சாலையோரம் பேக்குடன் நடுரோட்டில் நின்றிருந்த நபர், அவரது காரை வழிமறித்துள்ளார். ஆனால் வண்டியை நிறுத்தாமல் வலதுபுறமாக விலகி ஓட்டிச் சென்ற டிரைவர், சாதூர்யமாக கொள்ளையில் இருந்து தப்பினார். நள்ளிரவில் கார்களில் செல்பவர்கள் கவனமுடன் செல்லுமாறு தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல்வேறு புகாரை தொடர்ந்து இரு மாநில போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மப்டி உடையில் துப்பாகியுடன் போலீசார், நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் செல்கின்றனர். விரைவில் வழிபறி கும்பல் சிக்கும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

The post நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி புதுச்சேரி- திண்டிவனம் ரோட்டில் வழிப்பறியில் ஈடுபடும் மர்ம கும்பல் பொதுமக்களே உஷார்: கும்பலை பிடிக்க போலீஸ் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Puducherry-Tindivanam road ,Puducherry ,Puducherry-Thindivanam road ,Tindivanam ,Dinakaran ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்