×

வல்லவன் வகுத்ததடா விமர்சனம்

அசாத்திய அழகின் மூலம் அனைவருக்கும் அல்வா கொடுக்கும் அனன்யா மணியின் காதல் வலையில் சிக்கிய விக்ரம் ஆதித்யா, ஒரு நெக்லஸ் வாங்கிக் கொடுக்கிறார். அதை உடனே மாற்றிவிடுகிறார், பணத்தாசை கொண்ட அனன்யா மணி. ஊரையே அடித்து உலையில் போடும் இன்ஸ்பெக்டர் நீதிமணி என்கிற ராஜேஷ் பாலச்சந்திரன், எல்லா கேஸையும் குறுக்குவழியில் முடிக்க, ஸ்டேஷனில் சக போலீசாரின் சாபத்தை மீறி பேரம் பேசி பணம் பறிக்கிறார்.

கால்டாக்ஸி ஓட்டி பிழைப்பு நடத்தும் ஸ்வாதி மீனாட்சி, திடீரென்று வேலை பறிபோன நிலையில் தவிக்கும்போது, காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு ஓடிய சகோதரி, நிறைமாத கர்ப்பிணியாக வீட்டுக்கு திரும்புகிறார். செக்யூரிட்டியான அவர்களின் தந்தை அருள் டி.சங்கர், குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் கடன் வாங்க அலைகிறார். தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ் இருவரும் திருட்டுகளில் ஈடுபட்டு, லட்சியம் எதுவுமின்றி வாழ்க்கை நடத்துகின்றனர்.

வாங்கிய கடனைக் கொடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவரின் உடலுறுப்புகளை விற்று பணம் சம்பாதிக்கும் கறார் பைனான்சியராக விக்ரம் ஆதித்யா இருக்கிறார். இந்த 5 கதைகளுக்கும் ஹைபர்-லிங்க் தொடர்பு இருக்கிறது. ஒருவரது பணத்தேவை இன்னொருவரை துரத்துகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. ‘ஆள்மயக்கி’ கேரக்டருக்கு அனன்யா மணி பொருத்தமாக இருக்கிறார்.

ராஜேஷ் பாலச்சந்திரனின் மேனரிசமும், அந்த ‘ஹைனா’ சிரிப்பும் அட்டகாசம். ஏழையாக இருந்தாலும் நேர்மையாக வாழும் ஸ்வாதி மீனாட்சியும், அருள் டி.சங்கரும் மனதில் பதிகின்றனர். உடலுறுப்புகளை அடமானத்துக்கு வைத்துக்கொண்டு கடன் கொடுக்கும் விக்ரம் ஆதித்யா, பிரசாந்த் சாயலில் இருக்கிறார். இயல்பாக வஞ்சக நடிப்பை வெளிப்படுத்துகிறார். தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ் நட்பு நல்ல ரகம் என்றால், சுயலாபத்துக்காக தேஜ் சரண்ராஜையே கொல்லும் ரெஜின் ரோஸின் செயல் கெட்ட ரகம்.

நேர்த்தியாக திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார், விநாயக் துரை. கெட்டவர்களுக்கு கெட்டது நடக்கும். நல்லவர்களுக்கு எந்த ரூபத்திலாவது நல்லது நடக்கும் என்பது, படம் சொல்லும் மெசேஜ். கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவும், சகிஷ்னா சேவியரின் இசையும் கதையை நகர்த்த உதவுகின்றன. பணம் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சூழ்ச்சிகளை தர்மம் வெல்லும் என்பதால் மன்னிக்கலாம்.

The post வல்லவன் வகுத்ததடா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vallavan ,Vikram Aditya ,Ananya Mani ,Alva ,Inspector ,Neetimani ,Vallavan Vakuthadada ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வல்லவன் வகுத்ததடா படத்தில் 5 பேரின் ஹைப்பர்-லிங்க் கதை