×

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!: பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதில் முதற்கட்டமாக என்.மாலா, எஸ்.சௌந்தர் ஆகிய இருவரையும் கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து அவர்கள் ஏற்கனவே பதவியேற்றுவிட்டனர். இந்த நிலையில், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த இரண்டு நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இருவருக்கும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பிறகு புதிய நீதிபதிகளை வரவேற்று அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினார்கள். இந்த இரு நியமனங்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 58 பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. மேலும் 17 காலியிடங்கள் உள்ளன. நீதிபதி சுந்தர் மோகன்:நீதிபதி சுந்தர் மோகன் 1969ம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை வழக்கறிஞர்; தாய் ஆசிரியர். சென்னை சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். 1991 முதல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார். நீதிபதி குமரேஷ் பாபு:நீதிபதி குமரேஷ் பாபு சென்னையை சேர்ந்தவர். இவரது தந்தை கபாலி, சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முதல் பட்டதாரியான இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பட்டம் படித்து 1993ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை துவங்கினார். தமிழக அரசு சார்பில் 2001 – 2002 வரை அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். 2020 – 21 வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பல வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார். …

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!: பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chief Justice ,Munishwarnath Bandari ,Chennai ,Sunderr Mohan, ,K.P. ,Kumaresh Babu ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...