×

பொன்னையனின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதிமுக, பாஜ மோதல் முற்றுகிறது: ஒருவருக்கொருவர் மாறிமாறி தாக்குதலை தொடர்வதால் பரபரப்பு

சென்னை: அதிமுக மூத்த தலைவர் பொன்னையனின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதிமுக-பாஜ மோதல் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. தினமும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக, பாஜ கூட்டணி ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன் அதிமுக அமைச்சர்களுக்கு நெருக்கமான உறவினர்கள், பினாமிகள், கான்டிராக்டர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தப்படவில்லை. அதேநேரத்தில் உச்சக்கட்டமாக தலைமைச் செயலகத்திலேயே சிபிஐ சோதனை நடந்தது. இதனால், அதிமுக தலைவர்கள் பாஜவுக்கு ஆதரவு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.பல அமைச்சர்கள் மீது பாஜ தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறினாலும், அதை கண்டு கொள்ளாமல் இரு கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியைத் தொடர்ந்தனர். கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் ேபாட்டியிட்டு 39 தொகுதிகளிலும் இக்கூட்டணி தோல்வியை தழுவியது. அதேபோல, சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக, பாஜ கூட்டணி தோல்வியை தழுவியது. தோல்விக்கு காரணம் நீங்கள்தான் என இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர்.அதன்பின்னர் திமுக கூட்டணி பதவி ஏற்ற பிறகு மக்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஏற்பட்டதால், அதிமுக என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்தது. அத்துடன், அதிமுக மாஜி அமைச்சர்கள் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வந்தது. இதனால் அவர்கள் அமைதியாகி விட்டனர். ஆனால், கடந்த சில நாட்களாக திமுக அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் தவறான குற்றச்சாட்டுகளை கூறி, அந்தக் குற்றச்சாட்டுகளால் பாஜ மீதே மக்களின் கோபம் திரும்ப ஆரம்பித்தது. சில நேரங்களில் அது அதிமுகவையும் தாக்கத் தொடங்கியது. இதனால் பாஜ மீது அதிமுக தலைவர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அதேநேரத்தில் கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக தொண்டர்களை பாஜ இழுத்து வந்தது. ஆனால் மூத்த தலைவர்கள் பலர், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையின் சோதனைக்குப் பயந்து கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.ஆனால், முன்னாள் நிதி அமைச்சரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன், பாஜ மீது கடும் தாக்குதல் தொடுத்தார். தமிழகத்தில் பாஜதான் எதிர்க்கட்சி போல காட்டும் பிம்பம் நடக்கிறது. இதனால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும். இதை நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது. தமிழகத்தில் பாஜ வளர்வது ஆபத்து. அக்கட்சி இரட்டை நிலைப்பாட்டை கொண்டது. பாஜ செய்யும் தவறுகளையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். குறிப்பாக தமிழகத்துக்கு எதிராக உள்ள நீட் பிரச்னை, காவிரி நீரை கர்நாடகா தர மறுப்பது, ஜிஎஸ்டி பணம் தராமல் இருப்பது, வெள்ள நிவாரணம் வழங்காமல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்காக அதிமுக போராட வேண்டும் என்று கூறினார்.இதற்கு பதில் அளித்த பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொன்னையனை கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். இந்தக் குற்றச்சாட்டால் அதிருப்தி அடைந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வி.பி.துரைசாமி போன்றவர்கள் அதிமுகவை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. அவர் செல்லாத கட்சியே இல்லை. அவர் குறை சொல்லக்கூடாது என்று பதிலடி கொடுத்தனர். இந்தநிலையில், மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜ மீது அதிரடி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கட்சி வளர்ச்சிக்காக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ளக் கூடாது. பொன்னையன் கருத்து அவருடைய பார்வையில் சொல்லப்பட்டவை. தமிழகத்தில் தற்போது அதிமுக மட்டுமே எதிர்க்கட்சி. அதிமுக காக்கா கூட்டம் அல்ல. கொள்கை கூட்டம். பாஜவிற்கு வருவது இரை போட்டால் வரும் காக்கா கூட்டம் போன்றது. பாஜ துணைத்தலைவர் வி.பி.துரைசாமியெல்லாம் அதிமுக குறித்து பேசுவது வேடிக்கையானது. அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், அதிமுக தனித்து நிற்க தயாராக உள்ளது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்ல ஓபிஎஸ், இபிஎஸ் தயார் நிலையில் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. இது என்னுடைய சொந்த கருத்து அல்ல. அதிமுகவின் கருத்து. என்னுடைய இந்த கருத்தை எடப்பாடி, ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வார்கள். அண்ணாமலை தமிழகத்தில் அரசியல் செய்கிறார், எல்.முருகன் வேல் பிடித்தார். அவருக்கு ஒரு பதவி, தமிழிசை வந்தார் அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுபோல பதவிக்காக அண்ணாமலை அரசியல் செய்கிறார்’ என்று கடுமையான தாக்குலை தொடுத்தார். இதற்கு பதில் அளித்து பாஜ செயலாளர் கரு.நாகராஜன் கூறுகையில், ‘அரசியல் கட்சிகளுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும். அவ்வாறு கூடும் மக்களை காக்கா கூட்டம் என்று செல்லூர் ராஜூ கிண்டல் செய்வதுபோல் உள்ளது. நாங்கள் காக்கா பிடிக்கும் கூட்டம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். செல்லூர் ராஜூ தட்டில் உணவோடு மாடி மீது ஏறி நின்று கா… கா… என்று கத்தினாலும் ஒரு காக்கா கூட வராது. காக்காதான் உலகிலேயே சிறந்த பறவை. அதிகாலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலை செய்யும். ஒற்றுமை உணர்வையும் கற்றுக் கொடுக்கும்’ என்றார். இவ்வாறு தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் தொடர் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். ஏற்கனவே பொன்னையன் கருத்துக்கு அதிமுக நிர்வாகிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு பாஜ நிர்வாகிகளும் பதிலடியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது. பாஜ மீது அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவது தமிழக மக்களால் உற்று நோக்கப்படுகிறது.* முன்னாள் நிதியமைச்சரும்  அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன், பாஜ மீது கடும் தாக்குதல்  தொடுத்தார். தமிழகத்தில் பாஜதான் எதிர்க்கட்சி போல பிம்பம் காட்டுகிறது. அதை வளர விடுவது ஆபத்து என்று விமர்சித்தார்.* பொன்னையன் கருத்துக்கு பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கடுமையாக எதிர்வினையாற்றினார். …

The post பொன்னையனின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதிமுக, பாஜ மோதல் முற்றுகிறது: ஒருவருக்கொருவர் மாறிமாறி தாக்குதலை தொடர்வதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Ponnaiyan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி