×

திகலர் பர்பிள்: விமர்சனம்

அந்தக்கால படங்களில் பாடல்களின் மூலமாகவும் கதை சொன்னார்கள். அழுதாலும் பாட்டு, சிரித்தாலும் பாட்டு. அப்படி சொல்லப்படுவதுதான் ‘தி கலர் பர்பிள்’ படத்தின் கதை. அலீஸ் வால்கரின் நாவலை மையமாக வைத்து, அதே பெயரில் ஒரு படத்தை இயக்கினார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். அதுவும் பாடலும், ஆடலும் நிறைந்ததாக இருந்தது. தற்போது இப்படத்தை அவர் தயாரிக்க, பிளிட்ஸ் பசவூல் இயக்கியுள்ளார்.

செலியும் (பிலிக்கா பெரரி), நெட்லியும் (ஹலா பெய்லி) இணைபிரியாத தோழிகள். எப்போதும் இசையுடன் இணைந்து வாழ்பவர்கள். பாடிக்கொண்டே இருப்பார்கள். செலி சிறுமியாக இருக்கும்போது ஒருவனைக் காதலித்து கர்ப்பம் அடைகிறார். இதனால் பிறந்த குழந்தையை செலியிடம் இருந்து பிரிக்கும் தந்தை, அவரை பக்கத்து ஊரைச் சேர்ந்த காமுகன் ஜான்சனுக்கு (கால்மன் டொமினி) திருமணம் செய்து வைக்கிறார். அவனிடம் பலத்த கொடுமையை அனுபவித்தபடி வாழ்கிறார், செலி. ஒருநாள் வீட்டுக்கு வந்த தோழி நெட்லியையும் ஜான்சன் சீண்ட, அவனிடம் இருந்து தப்பித்து ஆப்பிரிக்கா சென்றுவிடுகிறார்.

சோபியா (டெனிலியா புரோக்ஸ்), பாடகி ஷக் அவேரியின் (தாராஜி ஹன்சன்) நட்பு செலிக்கு கிடைக்கிறது. அவர்களிடம் இருந்து பெண் விடுதலை, பெண் சுதந்திரம் பற்றி தெரிந்துகொள்ளும் செலி, எப்படி கணவனை எதிர்த்துப் போராடுகிறார் என்பது கதை. இறுதியில் தனது தோழி நெட்லியுடன் இணைந்தாரா என்பது கிளைமாக்ஸ். 1900 முதல் 1945 வரை கதை நடக்கிறது. படத்தின் உணர்வுகளை பாடல்களாலேயே கடத்திவிடுகிறார், இசை அமைப்பாளர் கிறிஸ் பவர்ஸ். வண்ணக்கோலமாக படத்தை வழங்கியுள்ளார், ஒளிப்பதிவாளர் டான் லவுஸ்டன். 10 நிமிடங்களுக்கு ஒரு பாடல் வந்தாலும், அது சலிக்காமல் இருப்பதுதான் படத்தின் பிளஸ் பாயின்ட். நடன அசைவுகள் உற்சாகம் அளிக்கிறது. செலி தனது கணவனிடம் படும் கொடுமைகள், நமது ஊரில் நடப்பது போன்றே இருக்கிறது. வயதான செலியாக நடித்துள்ள பேண்டசியா பெரினோவுக்கு விருதுகள் காத்திருக்கலாம். சோபியாவாக நடித்துள்ள டெனிலோ புரூக்ஸ், திரையில் தோன்றினாலே சிரிப்புதான். ஆணாதிக்கம் குறித்து பேசும் இப்படம், நிறவெறி பற்றியும் சொல்லிவிட்டுச் செல்கிறது.

The post திகலர் பர்பிள்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Steven Spielberg ,Alice Walker ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்