×

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே: விமர்சனம்

படித்துவிட்டு எந்தவொரு வேலைக்கும் செல்லாத செந்தூர் பாண்டியன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டு, பேஸ்புக்கில் இருக்கும் சில இளம் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பி, அதில் உடன்பட்டு வருபவரை மட்டும் தனது வலையில் சிக்க வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மதுரையில் வசிக்கும் அவருக்கு மாயவரத்தில் இருக்கும் பிரீத்தி கரணுடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்படுகிறது. அன்று பிரீத்தி கரணுக்கு பிறந்தநாள் என்பதால், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்க, தனது நண்பனுடன் பைக்கில் மதுரையில் இருந்து மாயவரத்துக்கு செல்கிறார். பிறகு தனது நண்பனை விட்டுவிட்டு, பிரீத்தி கரண் சொன்னபடி அவரை பூம்புகாருக்கு அழைத்துச் செல்லும் செந்தூர் பாண்டியன், அங்குள்ள ஒரு பெரிய பார்க்கில் பிரீத்தி கரணுடன் உல்லாசமாக இருக்க திட்டமிடுகிறார். அவரது உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட பிரீத்தி கரண், தன்னை முத்தமிட முயற்சிக்கும் அவரை எட்டி உதைக்கிறார். இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன

என்பது படத்தின் மீதி கதை.பெற்றோரின் கஷ்டத்தையும், உழைப்பையும் மதிக்காத கிராமத்து இளைஞர்கள் சிலரின் டீன்ஏஜ் நடவடிக்கைகளை திரையில் சொல்லியிருக்கிறார், இயக்குனர் ‘எனக்குள் ஒருவன்’ பிரசாத் ராமர். மதுரை இளைஞனின் பாடிலாங்குவேஜை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரணை கட்டியணைத்து முத்தமிட முயற்சிக்கும்போது, படாத இடத்தில் அவரது கால் பட்டதால் ஏற்பட்ட வலியால் துடிப்பது ரசிக்க வைக்கிறது. கத்தி மேல் நடப்பது போன்ற டீன்ஏஜ் பெண் கேரக்டரில், வெகுஇயல்பாகப் பொருந்தியுள்ளார் பிரபல மாடல் பிரீத்தி கரண். சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்ச்செல்வி போன்றோரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். புதுமுகங்கள் பிளஸ் பாயின்ட் என்றாலும், எல்லா காட்சி களிலும் அவர்களையே பார்ப்பது சலிப்பு ஏற்படுத்துகிறது.

மதுரை டூ மாயவரம் டூ பூம்புகார் சாலைப்பயணத்தில், இயற்கைஅழகை நேர்த்தியாகப் பதிவு செய்துள்ள உதய் தங்கவேல் கேமரா, எளிய காட்சிகளின் நகர்வுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. பாடகர் பிரதீப் குமாரின் பின்னணி இசையும், பாடல்களுக்கான இசை அமைப்பும் குறிப்பிட வேண்டிய ரகம். படத்துக்கு ‘ஏ’ சான்று கிடைத்ததாலோ என்னவோ, காண்டம் பற்றி பேசியும், டபுள் மீனிங் டயலாக்குகளை உதிர்த்தும் எல்லை மீறியுள்ளனர். நல்லபேரை வாங்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு நேரெதிர் கதையை 2 மணி நேரத்துக்குச் சொல்லியிருக்கின்றனர்.

The post நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Centur Pandian ,Madurai ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்