×

கார்டியன் விமர்சனம்…

சிறுவயதில் இருந்தே எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அது தவறாக முடிவதால், தன்னை ராசியில்லாத பெண் என்று நினைத்து கலங்குகிறார் ஹன்சிகா. இந்நிலையில், மந்திரவாதி உருவாக்கிய சக்திவாய்ந்த கல் மீது ஹன்சிகாவின் காலில் இருந்து வழிந்த ரத்தத்துளிகள் விழுகிறது. இதனால் கல் உயிர் பெறுகிறது. அதன் மூலம் ஹன்சிகாவின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவர் என்ன நினைத்தாலும் நடக்கிறது. கிடைக்காது என்று நினைத்த இன்டீரியர் டிசைனர் வேலை கிடைக்கிறது.

அங்கு பாலியல் தொல்லை கொடுக்கும் எம்.டி மரணம் அடைகிறார். ஒருபுறம் நல்ல விஷயங்கள் நடந்தாலும், மறுபுறம் தீய சம்பவங்கள் நடப்பதால் தவிக்கும் ஹன்சிகா, டாக்டர் ஸ்ரீராம் பார்த்தசாரதியிடம் எல்லா விஷயங்களையும் சொல்கிறார். தன்னை அமானுஷ்ய சக்தி கட்டுப்படுத்துவதை அறிந்த ஹன்சிகா அதிர்ச்சி அடைகிறார். அடுத்து 4 பேரை கொல்ல இருப்பதாக அமானுஷ்ய சக்தி ஹன்சிகாவிடம் சொல்கிறது. ஹன்சிகாவுக்கும், அமானுஷ்யத்துக்கும் என்ன தொடர்பு? அமானுஷ்ய சக்தி ஏன் 4 பேரை கொல்ல வேண்டும் என்பது மீதி கதை.

முழு படத்தையும் இயல்பான நடிப்பின் மூலம் தாங்கிப் பிடித்திருக்கிறார், ஹன்சிகா. அமானுஷ்ய சக்தி அவர் உடலில் குடியேறிய பிறகு ருத்ர தாண்டவமாடி, எதிரிகளைப் பொளந்து தள்ளுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ள அவருக்கு இது ‘கம்பேக்’ படமாக அமையலாம். பிரதீப் ராயன், சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத், புதுமுகம் தியா, அவரது மகளாக வரும் பேபி க்ரிஷிதா ஆகியோர், அவரவர் கேரக்டருக்கான நடிப்பை மட்டும் வழங்கியுள்ளனர்.

பழைய ஜோக் தங்கதுரையும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் காமெடி என்ற பெயரில், ஆங்காங்கே டபுள் மீனிங் டயலாக்கை அள்ளித் தெளித்திருக்கின்றனர். இயக்குனர் விஜய் சந்தர் தயாரித்துள்ளார். தன்னைக் கொன்றவர்களை ஆவி பழிவாங்கும் கதை என்றாலும், பழிவாங்கும் யுக்தியையாவது இயக்குனர்கள் குரு சரவணன், சபரி புதுமையாக யோசித்திருக்கலாம். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு அதிக பலம். ஆரம்ப காட்சி மற்றும் சில அமானுஷ்ய காட்சிகள் மிரட்டுகின்றன. ஹாரர் படம் என்பதால், பின்னணி இசையில் சாம் சி.எஸ் அலறவிட்டுள்ளார்.

The post கார்டியன் விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hansika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்