×

ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனையில் இழப்பு; 24 மாநிலங்களில் எரிபொருள் கொள்முதல் நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால், தங்களுக்கு சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பெட்ரோல் – டீசல் விற்பனை முகவர்கள் சங்கங்கள் இன்று ஒரு நாள் எரிபொருள் கொள்முதலை நிறுத்தி உள்ளன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை பீதி ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் 5,800 டீலர்கள் பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்யவில்லை. இருந்த போதிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய அரசு ரூ.8 அளவிற்கு குறைத்தது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.8 எனவும், டீசல் விலை லிட்டர் ரூ.6 என்ற அளவிற்கும் குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.94 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.87.89 ஆகவும் குறைந்தது. மேற்கண்ட வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இவர்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட வலியுறுத்தி 31ம் தேதி (இன்று) நாடு முழுவதும் எரிபொருள் கொள்முதல் நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் – டீசல் விற்பனை முகவர்கள் சங்கங்கள் அறிவித்தன.குறிப்பாக இந்த சங்கங்களின் கோரிக்கை என்னவென்றால், ‘ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் சில்லறை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுசெய்ய வேண்டும். கடந்த 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை கமிஷன் தொகை உயர்த்தப்படவில்லை. அதனால் அதனை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் ஒரு நாள் (இன்று) மட்டும் நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும். ஆனால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், பெட்ரோல், டீசல் எரிபொருள் தங்களது வாகனங்களுக்கு கிடைக்காது என்ற பீதியில், பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பங்குகளில் நேற்று மாலை முதல் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசலை பெற்றுச் சென்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் போன்ற நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலைப் பெற முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்தது. சிலர் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசலை வாங்கிச் சென்றனர். இதற்கிடையில் நேற்றிரவு ஒவ்வொரு பெட்ரோல் பங்கிற்கும் குறைந்தது 24,000 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளை செய்யப்பட்டது.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்ததால், ஒரே நாளுக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட 24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருளை கொள்முதல் செய்யவில்லை. இதுகுறித்து டெல்லி பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், விற்பனையாளர்களுக்கான கமிஷனை உயர்த்தி தரவில்லை. அதனால், இன்று ஒரு நாள் மட்டும் எண்ணெய் கிடங்குகளில் இருந்து எரிபொருளை கொள்முதல் செய்யவில்லை. 24 மாநிலங்களில் உள்ள சங்கங்கள் பெட்ரோல் மற்றும் டீசலை கொள்முதல் செய்யவில்லை. எங்களது கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்றார்.இது குறித்து சென்னை தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி கூறுகையில், இன்று ஒரு நாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் 5 ஆயிரத்து 800 டீலர்கள் பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்யவில்லை. இருந்த போதிலும் வாடிக்கையாளர்களுக்கு இருப்பு, பெட்ரோல், டீசலை வழங்கி வருகிறோம். இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு பங்கிலும் 4 நாட்களுக்கு பெட்ரோல், டீசலை இருப்பு வைப்பது வழக்கம்.  அதனால், தான் பாதிப்பு ஏற்படவில்லை  ’’என்றார்…

The post ஒன்றிய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனையில் இழப்பு; 24 மாநிலங்களில் எரிபொருள் கொள்முதல் நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Chennai ,Dinakaran ,
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...