×

அரிமாபட்டி சக்திவேல் விமர்சனம்…

திருச்சி முசிறி அருகிலுள்ள அரிமாபட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அந்த ஊர் இளைஞன் வேறொரு சாதி பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தால், ஊர் பஞ்சாயத்து கூடி இளைஞனையும், அவனது குடும்பத்தையும் ஊரைவிட்டே ஒதுக்கிவைத்து விடும். அதையும் மீறி புது ஜோடி வாழ்ந்தால், அவர்களைப் போட்டுத்தள்ளிவிட்டு, கதையை முடித்துவிடுவதை ஊர் கவுரவமாக நினைக்கின்றனர்.

இந்நிலையில், அரிமாபட்டியில் வசிக்கும் சார்லி, செந்திகுமாரி தம்பதியின் மகன் சக்திவேல் (பவன்.கே) வேறொரு சாதியைச் சேர்ந்த கவிதாவை (மேகனா ஹெலன்) காதலிக்கிறார். அதன் பின் நடப்பதே மீதி கதை. இச்சமூகத்தில் இன்னும் சாதிவெறி ருத்ர தாண்டவமாடுகிறது என்பதைச் சொல்லும் ஆயிரத்தில் ஒன்றாவது படம் இது. சக்திவேல் கேரக்டரில் தன்னைப் பொருத்திக்கொண்டு, இயல்பாக நடித்துள்ளார் பவன்.கே. அவரே கதை, திரைக்கதை எழுதி இணைந்து தயாரித்துள்ளார்.

அவரது காதலியாகவும், மனைவியாகவும் வரும் மேகனா ஹெலன், தன் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். சோகத்தை மட்டுமே சுமக்கும் சார்லி, ஆங்காங்கே தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். அவரது தந்தையாக அழகு, மனைவியாக செந்தி குமாரி மற்றும் பிர்லா போஸ், கராத்தே வெங்கடேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி போன்றோரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்.

ஜெ.பி.மேன் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகு இயல்பாகப் பளிச்சிடுகிறது. மணி அமுதவன் பின்னணி இசை, கதையை நகர்த்த உதவியிருக்கிறது. உண்மைச் சம்பவத்தைப் படமாக்கிய இயக்குனர் ரமேஷ் கந்தசாமி, ஹீரோவின் கேரக்டரை உதவி இயக்குனர் என்றும், கேட்டரிங் படித்துவிட்டு கேக் தயாரிக்கிறார் என்றும் குழப்பியிருக்கிறார். சாதி வன்மத்தைப் பற்றி சொல்ல வந்த இயக்குனர், அதற்கான தீர்வைச் சொல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

The post அரிமாபட்டி சக்திவேல் விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arimapati ,Trichy Musiri ,Panchayat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு