×

எம்.பி. சீட் கிடைத்தும் பீதியில் இருக்கும் மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாநிலங்களவை சீட் கிடைச்சும் மாஜி அமைச்சர் பீதியில் இருப்பதா சொல்றாங்களே.. ஏனாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடும் போட்டியில் மாநிலங்களவை சீட்டு பெற்றிருந்தாலும் மாஜி அமைச்சர் சண்முகம் பீதியில்தான் இருக்கிறாராம். இலை கட்சியில் திண்டிவனத்தாருக்கு எம்பி சீட் கொடுக்கப்பட்டிருக்கு என்று அவங்க கட்சியில எதிர்தரப்பு குஷியில் இருக்காம். காரணம், திண்டிவனத்தில் எம்பியாக இருப்பவர்களின் அரசியல் களம் முடிவுக்கு வந்துவிடும் சென்டிமெண்டை சொல்லி சண்முகத்தை பீதியடையச் செய்து வருகிறார்களாம். ஏற்கனவே, திண்டிவனத்தில் ஜெ.வின் நேரடி தொடர்பில் இருந்த ஹூராசாந்த் எம்பியான பிறகு, அத்துடன் அரசியல் பயணம் முடிவுக்கு வந்ததாம். அடுத்து, திண்டிவனத்தைச் சேர்ந்த வெங்கட்ராமனும் அப்படித்தானாம். கொடிகட்டிபறந்தவர், ரவுண்டான பாலத்தை கட்டிய பெருமையை பெற்ற அவர் எம்பி பதவியோடு ஓரங்கடப்பட்டுவிட்டாராம். அந்த வரிசையில் 3வதாக மாஜி அமைச்சர் சண்முகம் தான் என்று அவருக்கு எதிர்கோஷ்டி இலை கட்சியினர் நக்கலடித்து பேசி வருகிறார்களாம். இது, சண்முகத்தின் காதுக்கும் செல்ல, ஒருவேளை அப்படியேதேனும் நடந்திடுமோ என பீதியில் தான் இருக்கிறாராம். அப்படியெல்லாம் நடக்காது அண்ணே. கவலைப்படாதீங்க என அவங்க எடுபுடிகள் தூபம் போட்டு வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரெய்டால் கதிகலங்கி கிடக்கிறார்களாமே கடத்தல்காரர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில்  இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தி வருவதாக ஆந்திர மாநில  எதிர்க்கட்சி தலைவர் சந்தரபாபு நாயுடு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி  இருந்தார். உடனடியாக களத்தில் இறங்கிய உணவு கடத்தல் தடுப்பு  பிரிவு எஸ்பி இரவோடு இரவாக சோதனைச்சாவடிகளில் ரெய்டு நடத்தினார். அதோடு  வட்ட வழங்கல் துறை, பறக்கும்படையினரும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டுள்ளனர். இதனால் கடத்தல்கார்கள் கதிகலங்கி உள்ளனர். மேலும் சில  போலீசார் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் நடந்து வந்த கடத்தல் சம்பவம்  கடந்த சில நாட்களாக முடங்கி உள்ளதாம். கடத்தல்காரர்களும் அமைதி காத்து  வருகிறார்களாம். எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமாலும் ரெய்டு அடிப்பார்கள்  என்பதால் அமைதியாக இருக்கும்படி சில  கருப்பு ஆடுகள் அறிவுறுத்தி இருக்காங்களாம். ஆனாலும் சில கடத்தல்கார்கள்  தமிழக- ஆந்திர மாநில எல்லையான கொட்டாளம் வழியாக பைக்குகள், கார்களில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதையும் கண்காணிப்பதுடன்  கடத்தல்காரர்களுக்கு உதவும் போலீசாரையும் கண்காணித்தால் மட்டுமே ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முடியும் என்கின்றனர் நேர்மையான அதிகாரிகள்’’ என்றார்  விக்கியானந்தா.‘‘கோவை மாநகராட்சியில் அதிகாரிகள்  மத்தியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்தாலும், கரன்சி குவிக்கும்  பழக்கத்தை யாராலும் மாற்றமுடியவில்லை என்று சொல்கிறார்களே.. உண்மைதானா…’’  என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஆமா…  அதிகாரிகள் மத்தியில் கரன்சி நடமாட்டம் எப்போதும்போல் கரைபுரண்டு  ஓடுகிறது. எந்த பணி நடந்தாலும், அதற்குரிய பில்களை பாஸ் செய்வதற்கு,  சம்பந்தப்பட்ட பொறியாளர்கள்தான், முதலில் கையெழுத்து போட வேண்டியுள்ளது.  அதனால், இதை ஒரு பிடியாக வைத்துக்கொண்டு, கமிஷன் வாங்குவது வாடிக்கையாக  உள்ளது. மாநகராட்சி கமிஷனர் என்னதான் கநடவடிக்கை எடுத்தாலும், ஒன்றும்  செய்ய முடியவில்லை. சமீபத்தில் 2 பொறியாளர்கள் இந்த விவகாரத்தில் சிக்கி,  விஜிலன்ஸ் வரை விவகாரம் சென்றது. ஆனாலும், இதர பொறியாளர்களுக்கு பயம்  இல்லை. உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒரு பொறியாளர், ஞானமானவருக்கு பதிலாக  வந்தவர். இவர், வேலையே தெரியாமல் தகிடுதத்தம் போடுகிறாராம். எல்லா வேலையும்  தெரிந்ததுபோல் காண்பித்து, கமிஷனரிடம் நடிக்கிறாராராம். சமீபத்தில்  சட்டமன்ற மதிப்பீட்டு குழு கோவை வந்தபோது, கலந்துரையாடல் கூட்டத்தில்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், திக்குமுக்காடினாராம்.  இதைப்பார்த்து மற்றவர்கள் சிரித்துவிட்டனர். கடந்த ஆட்சியில்  விட்டுச்செல்லப்பட்ட ஒப்பந்த பணிகள் தொடர்பான கோப்புகள் இவரிடம்தான்  உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்ததாரர்களிடம் 5 சதவீதம் கமிஷன்  கேட்டு, தொல்லை கொடுக்கிறாராம். கமிஷன் கொடுக்கவில்லை என்றால் கோப்புகள்  நகர்வதில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சொகுசு கார் செலவு கணக்கை எந்த அக்கவுண்ட்ல எழுதுறதுன்னு குழப்பத்துல இருக்கிறதா சொல்றாங்களே.. என்ன மேட்டர்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.‘‘முட்டைக்கு  பேமசான மாவட்டத்தின் கொல்லிஹில்ஸ் பகுதியில் மைக்ரோ ஜெராக்ஸ் பேப்பர்களை  வைத்து ஸ்டூடன்ஸ் பிட் அடித்ததால் கிலோ கணக்கில் பறிமுதல் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது ஊரறிந்த கதை. ஆனால் இந்த தகவலை மீடியாக்காரர்களை  அழைத்து பேட்டியும் கொடுத்து பூதாகரமாக்கியது இந்த மாவட்டத்துக்கு  நியமிக்கப்பட்ட ஜாயிண்ட் டைரக்டர். மேலும் இந்த தகவலை தேர்வுத்துறைக்கும் பாஸ் பண்ணினாராம். இது உள்ளூர், டிஇஓக்கள், சிஇஓ மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திச்சாம். இவரு ஏற்கனவே அதியமான்கோட்டை மாவட்டத்திலும், ஜவுளி மாவட்டத்திலும் சிஇஓவாக இருந்திருக்கார். இப்போது, முட்டை மாவட்டத்திற்கு பறக்கும் படை பணிக்கு பணியாற்ற, தான் ஏற்கனவே பணியாற்றிய இரு மாவட்டத்திலிருந்தும் டீச்சருங்களை அழைச்சிட்டு வந்திருக்கார். மேலும் அவங்களுக்கு சொகுசு கார் வசதியும் செஞ்சி கொடுத்திருக்கார். இப்படி போனவங்க எங்கயும் எந்த பிட்டையும் பிடிக்கலையாம்.  இப்போ இந்த வாகனங்களுக்கான செலவை எந்த கணக்கில் எழுவது என்று முட்டை மாவட்ட அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்காம். இவர் உள்ளூர்  ஆசிரியர்களை மட்டம் தட்டுவதிலும் குறியாக இருப்பவரு என்று முட்டை மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்’’ என்றார்  விக்கியானந்தா….

The post எம்.பி. சீட் கிடைத்தும் பீதியில் இருக்கும் மாஜி அமைச்சரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Peter ,M.P. ,wiki ,Yananda ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில்...