×

ரணம் அறம் தவறேல்

பெருங்குற்றம், தொடர்விசாரணை பாணியில் வெளியாகியுள்ள விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படம் இது. சென்னை மாநகரின் வெவ்வேறு பகுதிகளில், எரிக்கப்பட்ட நிலையிலுள்ள கை, கால், உடல் போன்ற பாகங்கள் தனித்தனியாக கண்டுபிடிக்கப்படுகின்றன. போலீஸ் ஸ்டேஷனில் குற்றச்செயல்கள் குறித்த கிரைம் ஸ்டோரி ரைட்டரும், குற்றவாளிகளின் உருவங்களை வரைபவருமான வைபவ், இந்த குற்றச்செயல் குறித்த விசாரணைக்கு உதவ முன்வருகிறார். அவரது தீவிர முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள், வெவ்வேறு நபர்களுக்குரியது என்ற உண்மை தெரிகிறது.

அப்போது இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் திடீரென்று மாயமாகிறார். உடனே இந்த வழக்கை விசாரிக்கும் அசைன்மெண்ட் தான்யா ஹோப்புக்கு கொடுக்கப்படுகிறது. அவரும், வைபவ்வும் சேர்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, அதிர்ச்சியான சில சம்பவங்கள் நடக்கின்றன. நிஜ குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கும் வைபவ், கடைசியில் என்ன செய்கிறார் என்பது எதிர்பாராத திருப்பம். இது வைபவ்வின் 25வது படம். அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படம். கேரக்டரை உணர்ந்து இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார். குற்றவாளியைக் கண்டுபிடித்த பிறகு அவரது நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இருக்கிறது. போலீஸ் வேடத்துக்கு தான்யா ஹோப் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்றாலும், கம்பீரம் மிஸ்சிங்.

மகளைப் பறிகொடுத்த நர்ஸ் நந்திதா ஸ்வேதா, மரணத்துக்கான காரணத்தை அறிந்து துடிப்பதும், அதற்குப் பிறகு நடந்த படுபாதக செயலை அறிந்து பழிவாங்கத் துடிப்பதுமாக, நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி, சரஸ் மேனன், ஜீவா சுப்பிரமணியம், ‘விலங்கு’ கிச்சா ரவி உள்பட பலர், தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர். மார்ச்சுவரியில் நடக்கும் கொடுஞ்செயல் குறித்து சில படங்களில் இடம்பெற்றுவிட்டதால், இப்படத்தில் அக்காட்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதை புதிய இயக்குனர் ஷெரீஃப் கவனித்திருக்கலாம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவு, காட்சிகளின் வீரியத்தை அதிகரித்துள்ளது. கிரைம் திரில்லர் பிரியர்கள் பார்க்கலாம்.

The post ரணம் அறம் தவறேல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ranam Aram ,Chennai ,Kollywood Images ,
× RELATED தமிழ் படங்கள் பாணியில் ஹாலிவுட் படம் ரீ-ரிலீஸ்