×

கிளாஸ்மேட்ஸ் விமர்சனம்

 

வாடகைக்கு கார் ஓட்டும் ஹீரோ அங்கயற்கண்ணன், தன் மாமா குட்டிப்புலி சரவண சக்தியுடன் சேர்ந்து நாள் முழுக்க குடித்துவிட்டு கூத்தடிக்கிறார். தினமும் குடித்ததால் உடல்நலத்தையும், மனநலத்தையும் கெடுத்துக்கொண்ட அவர், ஒருகட்டத்தில் தன் ஆசை மனைவி பிராணாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்துகிறார். இதனால் அவரது நிம்மதி பறிபோகிறது. இன்னொரு முறை அங்கயற்கண்ணன் ஏற்படுத்திய கார் விபத்தில், மயில்சாமி அநியாயமாக பலியாகிறார். இதனால், மயில்சாமியின் குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. ஐஏஎஸ் படிக்கும் லட்சியத்தை தூக்கியெறிந்த அவரது மகள் அபி நக்‌ஷத்ரா, தன் வாழ்வாதாரத்துக்காக தவறான பாதைக்குச் செல்கிறார். இதை நேரில் பார்த்து துடிக்கும் அங்கயற்கண்ணனும், குட்டிப்புலி சரவண சக்தியும் என்ன செய்கிறார்கள்? கடைசியிலாவது திருந்தினார்களா, இல்லையா என்பது மீதி கதை.

மொடா குடிகாரன் கேரக்டருக்கு அங்கையற்கண்ணனும், குட்டிப்புலி சரவண சக்தியும் பொருந்தி இருக்கின்றனர். பெண்ணுக்கு சம உரிமை தருகிறேன் என்று, பணம் சம்பாதித்து வீட்டை நிர்வகிக்கும் வேலையை தன் மனைவி ஷில்பாவிடம் கொடுத்துவிட்டு, ‘நான் குடித்துக்கொண்டே இருப்பேன்’ என்று படம் முழுக்க லந்து செய்யும் குட்டிப்புலி சரவண சக்தியின் பாடிலாங்குவேஜ் சிறப்பு. ஆனால், டீச்சராக இருக்கும் மனைவி கடைசிவரை அவரை திருத்தவே முடியாத அளவுக்கு மக்கு சாம்பிராணியாக இருப்பது நெருடுகிறது. அதுபோல், படம் முழுக்க குடித்துக்கொண்டே இருக்கும் ஹீரோ அங்கயற்கண்ணனின் கேரக்டர் வடிவமைப்பும் உறுத்துகிறது. திருந்த நினைக்கும் அவர், அடுத்த காட்சியிலேயே ராவாக குடிப்பதெல்லாம் ஓவர். மற்றபடி, ஏற்றுக்கொண்ட கேரக்டருக்குப் பழுதில்லாமல் நடிப்பை வெளிப்
படுத்தியுள்ளார்.

பிராணாவின் குடும்பப்பாங்கான தோற்றமும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று நம்பும் பாங்கும் ரசிக்க வைக்கிறது. ஆனால், அவரும் கணவனை திருத்த முழுமூச்சாய் ஈடுபடவில்லை. ஷில்பா, அபி நக்‌ஷத்ரா, சாம்ஸ், டி.எம்.கார்த்திக், மீனாள் ஆகியோரும் நடிப்பில் கவனத்தை ஈர்க்கின்றனர். ஆனால், குடிகாரர்களை திருத்துவதற்காகவே மருத்துவமனை நடத்தும் டாக்டர் டி.எம்.கார்த்திக், எல்லா நேரமும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு, டாஸ்மாக் வாசலிலேயே தவம் கிடப்பது, நல்ல மருத்துவர்களை இழிவுபடுத்துகிறது. மயில்சாமி கடைசியாக டப்பிங் பேசி நடித்த படம் இது. ‘நல்லவன் குடிச்சா குழந்தை. கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்று, அவரும் தன் பங்கிற்கு குடிக்கு சப்போர்ட் செய்திருக்கிறார். பிரித்வியின் இசையும், அருண் செல்வராஜின் ஒளிப்பதிவும் கதையோட்டத்துக்கு உதவுகின்றன. குடியினால் ஏற்படும் தீமைகள் குறித்து சொல்ல நினைத்த இயக்குனர் குட்டிப்புலி சரவண சக்தி, படம் முழுக்க டாஸ்மாக்கிற்கு விளம்பரம் செய்திருக்கிறார். காட்சிகளை மாற்றி யோசித்து, திரைக்கதையில் அழுத்தத்தைக் கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

The post கிளாஸ்மேட்ஸ் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Angayakkannan ,Kuttipuli Saravana Sakthi ,Prana ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது..!!