×

வெப்சீரிஸில் நடிக்க மறுத்தது ஏன்?: விக்ராந்த் பதில்

சென்னை: ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி மகனாக நடித்துள்ளார் விக்ராந்த். அவர் கூறியது: நாளைக்கு திரைக்கு வரும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவரிடம் நிறைய விஷயங்களை கற்க முடிந்தது. படம் வெளியாவது மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது. எந்தவித படபடப்பும் இல்லை. காரணம், சினிமாவில் இந்த இடத்துக்கு வர நான் எடுத்த முயற்சிகள், உழைப்பு அதிகம். சினிமா குடும்பம் என்றாலும் அதை பின்னணியாகக் கொண்டு நான் முன்னேறி வரவில்லை.

ரசிகர்களின் அன்பால், இயக்குனர்களின் நம்பிக்கையால் எனக்கு நல்ல படங்கள் கிடைத்தன. இடையில் சினிமாவில் எனக்கு இடைவெளி அமைந்தது உண்மைதான். இந்த காலகட்டத்தில் நம்மை நாமே புரமோட் செய்துகொள்ளவும் பணம் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் நான் சுய புரமோஷனில் ஈடுபடவில்லை. அதற்கு பதிலாக ஒரு நடிகனுக்கு வேண்டிய திறமைகளை வளர்த்துக்கொண்டேன். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, ஜிம்முக்கு செல்வது, நிறைய கதைகள் கேட்பது என தயார் ஆனேன். அதற்கெல்லாம் பலனாக ‘லால் சலாம்’ கிடைத்தது. அதையடுத்து சைக்காலஜிக்கல் திரில்லர் படமொன்றில் நடித்துள்ளேன்.

இன்னும் 8 நாள் மட்டுமே இதன் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. இந்த படத்தை ‘வில் அம்பு’ பட டைரக்டர் ரமேஷ் இயக்குகிறார். இதையடுத்து அருள்நிதி நடித்த ைடரி படத்தை இயக்கிய இயக்குனர் இன்னாசிப்பாண்டி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். இது தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் சொல்லப்படும் கதையாக இருக்கும். இந்த படம் எனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும்.

சமீபத்தில் எனக்கு வெப்சீரிஸில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் ஆபாச காட்சிகள் இருக்கும் வகையில் கதை இருந்தது. உடனே நடிக்க மறுத்துவிட்டேன். ரசிகர்களுக்கு நல்லது சொல்கிறோமோ இல்லையோ, தவறானதை சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது மகனுக்கு 13 வயதாகிறது. அவனை வைத்துக்கொண்டு நான் இந்த வெப்சீரிஸ் பார்க்க முடியாது எனும்போது, அதில் ஏன் நான் நடிக்க வேண்டும்? அதே சமயம், நல்ல கதைகள் வரும்போது கண்டிப்பாக வெப்சீரிஸில் நடிப்பேன். இவ்வாறு விக்ராந்த் கூறினார்.

The post வெப்சீரிஸில் நடிக்க மறுத்தது ஏன்?: விக்ராந்த் பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vikrant ,Chennai ,Rajini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்