×

சிக்லெட் 2கே கிட்ஸ்

தலைமுறை இடைவெளி மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பற்றி இனிப்பு தடவிய மருந்தாகச் சொல்லியிருக்கின்றனர். அது ‘ஓவர்டோஸ்’ ஆகிவிட்டது. 2K கிட்ஸ்களின் வாழ்க்கையும், அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் கதை. ‘ஏ’ சர்ட்டிபிகேட் என்பதாலோ என்னவோ காட்சிகளும், வசனங்களும் பகீரென்று இருக்கிறது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகிய கல்லூரி மாணவிகள் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள். நயன் கரிஷ்மா மீது அம்மா சுரேகா வாணி அதிக நம்பிக்கை வைத்து, அவரை டாக்டராக்க முயற்சிக்கிறார். அவரது கணவர், ராணுவ மேஜராக இருந்து மறைந்தவர். அம்ரிதா ஹால்டர் மீது தந்தை ஸ்ரீமன் அபார நம்பிக்கை வைத்து, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததைக்கூட, ‘இவ்வளவுதான் எதிர்பார்த்தேன். ஆனால், நீ இவ்வளவு மார்க் எடுத்துவிட்டாயே’ என்று ஆச்சரியப்பட்டு, மனைவியைக் கண்டித்தபடி மகளைக் கொஞ்சுபவர். மஞ்சீரா மீது அதிக பாசம் கொண்ட தந்தை ராஜகோபால், தன்னைப்போல் அவரை கவர்மெண்ட் வேலையில் அமர்த்த ஆசைப்படுகிறார்.

தங்கள் மகள்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் இவ்வளவு ஆழமாக கவலைப்படும் நிலையில், அந்த மகள்களோ வாலிப வயதுக்கு வந்துவிட்டதால், இனி தங்கள் எதிர்கால வாழ்க்கையை தாங்களே வடிவமைப்போம் என்று சபதம் செய்து, ஆளுக்கு ஒரு ஆண் நண்பருடன் பார்ட்டிக்குச் செல்கின்றனர். ‘தோழிக்கு திருமணம்’ என்று பெற்றோர்களிடம் பொய் சொல்லி பார்ட்டிக்குச் சென்ற நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர், உடல்ரீதியாக ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்க முடிவு செய்கின்றனர். மெடிக்கல் ஷாப்பில் ‘காண்டம்’ வாங்கி அதிர வைக்கின்றனர். மகள்கள் பார்ட்டிக்குச் சென்றிருக்கும் விஷயம் தெரிந்து பதறிய சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் ஆகியோர், அவர்களை கண்டுபிடிக்கச் செல்லும்போது, கடற்கரை விடுதி ஒன்றில் ரெய்டு வந்த போலீஸ் சம்பத் ராமிடம் சிக்குகின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

புகை, மது, தவறான விஷயங்களைப் போதிக்கும் சமூக வலைத்தளங்கள் என்று, இளம் தலைமுறையினரின் வாழ்க்கை எவ்வாறு சீரழிகிறது என்பதை அக்கறையுடன் சொல்ல முயன்ற ‘திறந்திடு சீசே’ இயக்குனர் எம்.முத்து, 3 இளம் பெண்களின் கேரக்டர்களை வடிவமைத்ததில் சறுக்கிவிட்டார். காதலுக்கும், காமத்துக்கும் வித்தியாசம் தெரியாத அவர்களை, ‘அதுக்கு’ மட்டுமே அலைபவர்கள் போல் காட்டியிருப்பது நெருடல். கிளைமாக்சில் நீதி சொன்னாலும், ‘அடல்ட் கன்டென்ட்’ படமாகவே நினைக்க முடிகிறது. நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் கிளாமரில் மட்டுமே போட்டி போட்டுள்ளனர். பெற்றோர்களாக வரும் சுரேகா வாணி, ஸ்ரீமன், ராஜகோபால் ஆகியோர் நிறைவாக நடித்துள்ளனர். அம்ரிதா ஹால்டர் லெஸ்பியன் என்றதும் அதிர்ச்சி அடையும் ஸ்ரீமன், மகளின் கவுரவத்துக்காக ஆதரவுக்கரம் நீட்டும் இடத்தில் சபாஷ் சொல்ல வைக்கிறார். நயன் கரிஷ்மா நண்பராக சாத்விக் வர்மா, அம்ரிதா ஹால்டர் நண்பராக ஜாக் ராபின்சன், மஞ்சீரா நண்பராக ரசீம் நடித்துள்ளனர். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலு இசையும் படத்தின் தேவையை உணர்ந்து உதவியுள்ளன. கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று முன்பே தெரிந்துவிடுவது பலவீனம். காதலைச் சொல்வதா? காமத்தைச் சொல்வதா என்று இயக்குனர் தடுமாறியுள்ளார்.

The post சிக்லெட் 2கே கிட்ஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayan… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்