×

விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி (சந்தானம்) தனது ஊரில் கண்ணாம்பாள் கோயிலைக் கட்டி, மக்களிடையே விதவிதமான ஐதீகங்களைச் சொல்லி பணம் வசூலிக்கிறார். அந்த ஊரிலுள்ள மூக்கையன் (ஜான் விஜய்), காளையன் (ரவிமரியா) ஆகியோர் எப்போதும் சண்டைக்கோழிகளாக இருக்கும் பெரியதலைகள். அங்கு புதிதாக வரும் தாசில்தார் (தமிழ்), கோயில் சொத்துகளை ஏலத்துக்கு விட்டு நிறைய சம்பாதிக்கலாம் என்று சந்தானத்துக்கு ஐடியா கொடுக்கிறார். அதை சந்தானம் மறுப்பதால், ஊருக்குள் கலவரத்தை தூண்டி, கோயிலை மூட வைக்கிறார் தாசில்தார். கோயிலை மீண்டும் திறக்க, சென்னையில் இருந்து ‘மெட்ராஸ் ஐ’யை தொற்றிக்கொண்டு வந்து, ஊரிலுள்ள மக்களிடம் பரப்புகிறார் சந்தானம். ‘கோயிலை மூடியதால், ஆத்தா நம் கண்ணைக் குத்திவிட்டாள்’ என்று கதையளக்கிறார். அவரது திட்டம் பலித்ததா? கோயில் மீண்டும் திறக்கப்பட்டதா என்பது மீதி கதை. முழம் முழமாக காதில் பூ சுற்றினாலும், படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் கார்த்திக் யோகி. கண்ணிவெடி, மெட்ராஸ் ஐ தொடர்பான காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன. ‘உங்களுக்கு வந்திருப்பது கண் நோய்’ என்று கயல்விழி (மேகா ஆகாஷ்) மருந்து போட முயற்சிக்கும்போது, அவரது பையிலுள்ள சிலுவையின் (ரெட்கிராஸ் லோகோ) குறியீட்டைக் காட்டி, உங்களை மதம் மாற்றுகிறார் என்று சந்தானம் திருப்பிவிடும் காட்சியில் தியேட்டர் அதிர்கிறது.

சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடியில் கலகலக்க வைக்கிறார். மேகா ஆகாஷூக்கு அதிக வாய்ப்பு இல்லை. இருவரது காதலுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. சந்தானத்தின் நண்பராக வரும் முருகேசனின் (மாறன்) காமெடியில் டபுள் மீனிங் இருந்தாலும், தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. ஊர் தலைவர்கள் ரவிமரியா, ஜான் விஜய் நடிப்பு ஓவர் என்றாலும், அவர்களது கேரக்டர்கள் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. முதல்முறையாக நிழல்கள் ரவி காமெடியில் கலக்கியிருக்கிறார். பூசாரி ேசஷு, பார்வையற்ற எம்.எஸ்.பாஸ்கர், அடியாள் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சிரிக்க வைத்துள்ளனர். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், தீபக்கின் ஒளிப்பதிவும் படத்தின் கதையோட்டத்துக்கு என்ன தேவையோ அதை மிகச் சரியாக கொடுத்துள்ளன. ‘கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதும், கடவுள் நம்பிக்கையை விமர்சிப்பதும் தவறு’ என்று மெசேஜ் சொன்னாலும், இரண்டையும் அதிகமாக கிண்டலடித்துள்ளது படம். இரண்டரை மணி நேரம் பொழுதுபோகும்.

The post விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nathakupatti ,Ramasami ,Santhanam ,Kannambala temple ,John Vijay ,Ravimaria ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இன்றைய நிகழ்ச்சி சம்மர் ஸ்போர்ட்ஸ்...