×

BLUESTAR விமர்சனம்

 

அரக்கோணம் அருகில் உள்ள அந்த கிராமத்து இளைஞர்களுக்கு கிரிக்கெட்தான் உயிர். பள்ளி, கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் அவர்கள் உருண்டு புரள்வது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள அந்த மைதானத்தில்தான். ஜாதி ரீதியான பிரிவினை கொண்ட அந்த ஊரில் ஒரு ஜாதியை சேர்ந்த புளூ ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஞ்சித் (அசோக் செல்வன்), இன்னொரு ஜாதியை சேர்ந்த ஆல்பா அணியின் தலைவர் ராஜேஷ் (சாந்தனு பாக்யராஜ்). 5 வருடங்களுக்கு முன்பு இரு அணிகளும் மோதிய போது புளூ ஸ்டார் அணியை சேர்ந்த இம்மானுவேல் (பக்ஸ்) காலை எதிர் அணியினர் உடைத்து விட, இனி இரு அணிகளும் மோதக்கூடாது என்று விலக்கி வைக்கப்படுகிறது. அன்றிலிருந்து இரு அணிகளும் மைதானத்தில் மோதிக் கொள்ளாவிட்டாலும் வெளியில் மோதிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் இரு அணியும் மைதானத்தில் மோதி யார் பெரியவர் என்று முடிவு செய்து விட தீர்மானிக்கிறார்கள். இந்த மோதலின் முடிவில், மோத வேண்டியது தங்களுக்குள் அல்ல, அதிகாரம் படைத்த கிரிக்கெட் நிர்வாகத்துடன் என்று முடிவெடுக்கிறார்கள். இந்த மோதலில் அவர்கள் வெற்றி பெற்றார்களா, அவர்கள் சந்தித்த பிரச்னை என்ன என்பதுதான் கதை.

கிரிக்கெட்டும், இன்றைய இளைஞர்களும் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்று ஆகிவிட்ட நிலையில் அதன் பின்னணியிலேயே ஜாதி முரண்பாடுகளையும், வர்க்க முரண்பாடுகளையும், இரண்டுக்கும் பின்னால் இருக்கிற அரசியலையும் பேசி இருக்கிறார் அறிமுக இயக்குனர் எஸ்.ஜெயகுமார். கதையை தாண்டி அதிகமான கிரிக்கெட் போட்டிகள் திகட்டினாலும், வழக்கமான ஒரு கிரிக்கெட் போட்டியாக இல்லாமல் பின்னணியில் வலுவான வேறு காரணங்கள் இருப்பதால் அதோடு சேர்த்து ரசிக்க வைக்கிறது. போட்டிகளை கேலரியில் இருந்து படம் பிடிக்காமல் மைதானத்தில் நின்று ஒளிப்பதிவாளர் தமிழ் அ.அழகன் படம்பிடித்திருப்பதால் ஒவ்வொரு ஷாட்டுடனும் ஒன்றிவிட முடிகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் விளையாட்டுக்கு வலு சேர்க்கிறது.

அசோக் செல்வனும், சாந்தனுவும் கீரியும், பாம்புமாக மோதிக் கொள்வதும், பின்னர் ஒன்றாகி எதிரியை எதிர்த்து நிற்பதுமாய் நடிப்பில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். இருவருக்குமே இது முக்கியமான படமாகி இருக்கிறது. தெனாவெட்டு உடல் மொழியும், யதார்த்த பேச்சுமாய் அரக்கோணத்து ஆனந்தியாய் வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது கேரக்டரின் முக்கியத்துவம் குறைந்து விடுவது சோகம். உள்ளூர் கிரிக்கெட் நட்சத்திரமாய் பக்ஸ் நிறைவாக செய்திருக்கிறார். பிருத்வி பாண்டியனும் ஸ்கோர் செய்கிறார்.படத்தின் இந்த ஜாதிகள் என்று நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் குறிப்பிட்ட ஒரு ஜாதியின் குறியீடுகளை குறைத்திருக்கலாம். சாந்தனுவின் காதல் ஏரியா சரியாக கையாளப்படவில்லை. இப்படியான சில குறைகள் இருந்தாலும் புளூ ஸ்டார் மின்னாமல் இல்லை.

The post BLUESTAR விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Aragonam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி