×

கேப்டன் மில்லர் – திரைவிமர்சனம்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

சுதந்திரப் போராட்டத்தில் 1930 மற்றும் 1940 இடைப்பட்ட காலம். அதில் ஏற்கனவே மன்னர் வகையறாக்களால் சாதிப்பிரச்சனையை எதிர்நோக்கி போராடிக் கொண்டிருக்கும் ஒரு சிறு கிராமம் உடன் சுதந்திரப் போராட்டமும் இணைந்து கொண்டு இரண்டு பிரச்சினைகளுக்காகவும் போராடுகின்றனர். இவர்களுக்கு ஒரு கட்டத்தில் தலைவன் ஆகிறான் அனாலீசன் என்கிற ஈசா என்னும் கேப்டன் மில்லர் ( தனுஷ்) . இந்தப் போராட்டம் என்னவாக உருவாகிறது முடிவு என்ன என்பது மிதிக்கதை.

அனாலீசன் ஆகவும் கேப்டன் மில்லர் ஆகவும் தன்னை ஒரு ராணுவ வீரனாக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வேலையில் சேர்ந்து தான் எதற்கு சேர்ந்தோம் என்பது தெரிந்து அங்கே நொறுங்கும் தனுஷ் மனதில் இடம் பிடிக்கிறார். அங்கிருந்து அவரின் கதாபாத்திரமும் சரி அவரின் நடிப்பும் சரி மொத்தமாக வேறு ஒரு காலத்திற்கு பயணிக்கிறது. மொத்த படத்தையும் தோளில் தாங்கி நிற்கும் தனுஷ் பல இடங்களில் மாஸ் கிளாஸ் லுக்கில் தெரிகிறார். அதிதி பாலன் , ஜான் , ஜெயபிரகாஷ் எல்லோருக்கும் சொற்ப காட்சிகள் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்கள்.

ஜெயிலர் படத்தின் மூலம் மாஸ் கெஸ்ட் ரோலில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தமிழிலும் உருவாக்கியவர் சிவராஜ் குமார். இங்கே அவருடைய பாத்திரம் இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம் எனத் தோன்றியது.

படம் முழுக்க வறண்ட சதுப்பு நிலம் சுற்றிலும் மலை, போராட்டம் துப்பாக்கி போராளி என்று இருக்க இதற்கிடையில் பிரியங்கா மோகன் பளிச்சென மேக்கப் முகத்துடன் சுற்றி வருவது சற்று இடையூறாக தெரிகிறது. அவரின் தோற்றத்திலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். அதே சமயம் நிவேதிதா சதீஷ் கேரக்டர் மனதில் நிற்கிறது. சந்தீப் கிஷன் சரியான இடத்தில் அளவாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.

முந்தைய இரு படங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது மட்டுமே என்னும் குறிக்கோளுடன் கதை எழுதிய அருண் மாதேஸ்வரன் இந்தக் கதையை எல்லோரும் பார்க்கும்படி வன்முறைக் காட்சிகள் குறைவாகவும், திரைக்கதையில் கமர்சியல் கலரும் கொடுத்திருக்கிறார். எனினும் கதையில் இன்னும் தெளிவும் , திரைக்கதையில் வேகமும் சேர்த்திருக்கலாம்.

படத்தின் மிகப்பெரும் பலம் தொழில்நுட்பம். குறிப்பாக சிவப்பு நிற டோன்கள் எதுவும் பயன்படுத்தாமல் நம்மூர் காலநிலை, மற்றும் நிலத்துக்கான லைட்டிங் மற்றும் நிறம் பயன்படுத்தி இருப்பது அருமை. சித்தார்த்தா ஒளிப்பதிவில் சண்டை காட்சிகள் சில இடங்களில் அனலாக தெரிகின்றன. ஜி. வி. பிரகாஷ் குமார் பின்னணி இசை காட்சிகளுக்கு மெருகேற்றி காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் கேப்டன் மில்லர் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ படம் நெடுக அத்தனை சிறப்புக் காட்சிகள் உள்ளன. பொதுவான மக்கள் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் , எவ்வித லாஜிக்குகளையும் தேடாமல் படம் பார்த்தால் நல்ல கமர்சியல் ஆக்ஷன் பட அனுபவம் கிடைக்கும்.

The post கேப்டன் மில்லர் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Siva Rajkumar ,Sandeep Kishan ,Priyanka Mohan ,Arun Madeshwaran ,Satyajoti Films ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்