×

மதிமாறன் விமர்சனம்…

போஸ்ட்மேன் எம்.எஸ்.பாஸ்கருக்கு நெடுமாறன் (வெங்கட் செங்குட்டுவன்), மதி (இவானா) ஆகிய இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் நெடுமாறன், உயரம் குறைவாகப் பிறந்த மாற்றுத்திறனாளி. அந்தக்குறை தன் மகனுக்குத் தெரியாதபடி எம்.எஸ்.பாஸ்கர் வளர்க்கிறார். மதியும் அப்படியே தன் தம்பியை நடத்துகிறார். நெடுமாறன் படிப்பில் கெட்டி, மதி சுமார். வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று மதி தனது புரொபசரைக் காதலித்து கர்ப்பமடைந்து, பிறகு வீட்டுக்குத் தெரியாமல் சென்னைக்கு ஓடிவிடுகிறார்.

இதனால் அவமானம் தாங்க முடியாத எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கின்றனர். மதியைத் தேடி சென்னைக்கு வரும் நெடுமாறன், இறுதியில் அவரைக் கண்டுபிடித்தாரா? உண்மையில் மதிக்கு என்ன நடந்தது என்பது மீதி கதை. உருவக்கேலிக்கு எதிராக ஒரு படத்தைக் கொடுக்க முயற்சித்த இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன், முற்பகுதியில் அந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லிவிட்டு, பிற்பகுதியில் சைக்கோ கொலைகாரன், போலீஸ் விசாரணை என்று எங்கெங்கோ கதையை நகர்த்திச் சென்று முடிக்கிறார்.

நிஜமாகவே உயரம் குறைந்த நடிகர் வெங்கட் செங்குட்டுவன், மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். நிஜத்திலும் அவர் உருவக்கேலியைக் கடந்து வந்திருப்பதால், அந்த உணர்வை திரையில் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். இவானா பாசக்கார அக்காவாக நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகான அவரது தோற்ற மாற்றம் கச்சிதம். நெடுமாறனைக் காதலிக்கும் பிரபாவதி (ஆராத்யா) ஓரளவு கவனிக்க வைக்கிறார்.

போலீஸ் கேரக்டருக்கும் கச்சிதம். பர்வேசின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்குப் பெருமளவு உதவியுள்ளன. ஊருக்கே உபதேசம் செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், தன் மகளின் செயலுக்காக தற்கொலை செய்துகொள்வதில் லாஜிக் இடிக்கிறது. குற்றச்செயல்கள் பற்றிய அதீத அறிவுடையவராக வெங்கட் செங்குட்டுவன் இருந்தாலும், போலீஸ் அவரைப் பயன்படுத்துவது நடைமுறைக்கு மாறானது. உருவக்கேலியை மையமாக வைத்து அழுத்தமான ஒரு படத்தைக் கொடுத்திருந்தால், முக்கியமான படமாகி இருக்கும்.

The post மதிமாறன் விமர்சனம்… appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : M. S. Baskar ,Nedumaran ,Venkat Sengutuvan ,Mati ,Ivana ,M. S. Bhaskar ,Madi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...