×

பேராவூரணி பகுதி வயல்களில் கிடைபோட வந்திறங்கிய ஆட்டு மந்தைகள்

பேராவூரணி: பேராவூரணி பகுதியில் விவசாய நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தவும், இயற்கை உரத்துக்காகவும் வயல்களில் கிடை போடுவதற்காக ராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆட்டு மந்தைகள் வந்திறங்கியுள்ளன. பேராவூரணி பகுதியில் தற்போது அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளதால், மேய்ச்சலுக்காகவும், வயல்களில் கிடை போடுவதற்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான ஆட்டு மந்தைகள் பேராவூரணி பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.அறுவடைப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வயல்களில் கோடை உழவு நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வயல், வரப்புகள், ஆற்றங்கரை, ஏரிக்கரை ஓரங்களில் புல் மற்றும் செடிகள் செழித்து வளர்ந்துள்ளன. இவற்றில் பகல் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடவும், இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வயல்களில் கிடை போடவும் ஆட்டு மந்தைகளை பயன்படுத்துகின்றனர்.விவசாயிகளிடம் வயல்களில் கிடை போட ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக பெற்றுக்கொள்கின்றனர். 500 ஆடுகள் கொண்ட ஒரு மந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை வாடகையாக வசூலிக்கின்றனர். கிடை போடுவதால் ஆட்டின் கழிவுகள் வயலுக்கு நல்ல இயற்கை உரமாக மாறுவதால், விவசாயிகள் கிடை போடுவதை விரும்புகின்றனர். இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம், டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆட்டுமந்தை உரிமையாளர் ராமசாமி கூறியது, பேராவூரணி பகுதியில் தற்போது அறுவடை பணிகள் முடிந்துள்ளதால் வயல்களில் ஆடுகளை மேய்த்து வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு வளர்ப்போர், எங்கள் ஆடுகளை லாரி மூலம் ஏற்றிக் கொண்டு வந்து, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு, பகல் நேரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இரவு நேரங்களில் வயல்களில் கிடை போட்டு வருகிறோம்.ஆடுகளைக் கொண்டு கிடை அமைக்கும்போது வயலுக்கு இயற்கை உரம் கிடைக்கும். மண்ணின் வளம் மேம்படும். இரவில் ஆடுகளை பட்டி அமைத்து ஒரே இடத்தில் தங்க வைப்பதால் ஆடுகளின் சிறுநீர், புழுக்கை வயலுக்கு நல்ல உரமாகிறது. சில விவசாயிகள் வயலில் இரண்டு, மூன்று நாட்களுக்கும், ஒருசிலர் ஒருவாரத்துக்கும் கிடை போட சொல்வார்கள். வளர்ந்த ஆடுகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம்.ஆடு மேய்க்க ஆட்கள் கிடைப்பது தற்போது பெரும் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் கடும் வெயில் கொளுத்தும் சூழலிலும் பாரம்பரியத்தை விடாமலும், வேறு பிழைப்புக்கு வழி தெரியாமலும் ஆடுகளை மேய்த்து வருகிறோம். மார்ச் மாதம் தொடங்கி டெல்டா பகுதியில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் ஜூன் முதல் வாரம் வரை, விவசாயிகள் கிடை போடச்சொல்வார்கள். அதன் பிறகு எங்கள் பகுதிக்கு ஆடுகளை கொண்டு செல்வோம் என்றார்….

The post பேராவூரணி பகுதி வயல்களில் கிடைபோட வந்திறங்கிய ஆட்டு மந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Beravurani ,Peravoorani ,Ramanathapuram ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’